Ads Area

கல்முனைக்கு கொவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை; ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறார் முதல்வர் ஏ.எம்.றகீப்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்தியத்திற்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முன்வந்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

எமது நாட்டில் தீவிரமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் கட்டம் கட்டமாக தடுப்பூசிகளை கொள்வனவு செய்து, அவை உரியவர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாத முற்பகுதியில் மாத்திரம் 04 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டு, சுகாதார அமைச்சினால் அவை அனைத்து மாவட்டங்களுக்கும் ஏக காலத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அவற்றுள் கிழக்கு மாகாணத்தின் 03 மாவட்டங்களுக்கும் தலா 25,000 சினோபாம் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட போதிலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனைப் பிராந்தியம் உள்வாங்கப்படாமல் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தது. இங்கு கொரோனா வைரஸ் தொற்று வீதம் குறைந்தளவில் இருந்தமையினாலேயே கல்முனைப் பிராந்தியத்திற்கு தடுப்பூசி கிடைக்கவில்லையென சுகாதாரத் தரப்பினரால் அப்போது கூறப்பட்டது.

எவ்வாறாயினும் பின்னர் கல்முனைப் பிராந்தியத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருவதுடன் மரணங்கள் ஏற்பட்டு வருவதையும் இதனால் கல்முனையின் நிலைமை மோசமடைவதையும் இப்பகுதியில் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டியவர்களுக்கு அது கிடைக்காமல் தவிர்க்கப்பட்டதன் விளைவே இத்தொற்று பரவல் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்பதையும் சுட்டிக்காட்டி, கல்முனைக்கு கொவிட் தடுப்பூசிகளை அவசரமாக பெற்றுத்தர ஆவன செய்யுமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு கடந்த மாத பிற்பகுதியில் கடிதமொன்றை அனுப்பியிருந்தேன்.

அத்துடன் ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கல்முனையின் ஆபத்தான நிலைமை தொடர்பில் விளக்கியிருந்தேன். இதையடுத்து எமக்கு கொவிட் தடுப்பூசிகளை பெற்றுத்தருவதற்கு ஜனாதிபதி முன்வந்திருக்கிறார். விரைவில் எமது கல்முனைப் பிராந்தியத்திற்கு ஒரு தொகை தடுப்பூசி வழங்கப்படும் என்று எமக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எமது கோரிக்கையை உடனடியாக பொறுப்புடன் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு இப்பிராந்திய மக்கள் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe