நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று நாடுமுழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரானிய சிறுமி, 'சந்தூர்' என்ற இசைக் கருவியில் இந்திய தேசிய கீதத்தை இசைத்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
'சந்தூர் இசைக் கருவியில், குச்சியின் நுனியில் கோலி போன்ற அமைப்பின் மூலம், கம்பிகளைத் தட்டி தட்டி நம்முடைய தேசிய கீதத்தை வாசித்து அந்த அயல்நாட்டு சிறுமி அசத்தியுள்ளார். சிறுமியின் அற்புதமாக இசையில் தேசிய கீதத்தை கேட்கும்போது, தேசபக்தி உணர்வு மேலிடுகிறது; மனம் மகிழ்ச்சியடைகிறது. மதத்தால், இனத்தால், தேசத்தால், மொழியால் வெவ்வேறாக இருந்தாலும், நமது தேசிய உணர்வை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியதால், பல வேற்றுமைகள் கடந்து நம்முள் ஒருவராகிறார் இந்த சிறுமி' என, தேசபக்தி மிகுந்தவர்கள் சிறுமியைப் பாராட்டி வருகின்றனர்.
இந்த வீடியோ கடந்த மார்ச் மாதமே இணையத்தில் பதிவேற்றப்பட்டு இருந்தாலும், இன்று நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மீண்டும் இது வைரலாகியுள்ளது. குறிப்பாக, நாட்டுப்பற்று மிக்கவர்கள் தங்களது வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஸ்டேட்டஸ்களில் இந்த வீடியோவை வைத்துள்ளனர். மேலும் உலகம் முழுக்க வாழும் இந்தியர்கள், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து பிரபலப்படுத்தி உள்ளனர்.