Ads Area

சிறிதரன் எம்.பி கோமா நிலையிலிருந்து வெளியேறி நிதான நிலைக்கு உடனடியாக வர வேண்டும் : அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா

மாளிகைக்காடு நிருபர்

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் பாராளுமன்ற உரையில் கூறியது போன்று ஊர்வலங்கள் நடத்தியது முஸ்லிம் ஜனாஸாக்களுக்காக மட்டுமல்ல அந்த காலப்பகுதியில் எரிக்கப்பட்டது முஸ்லிம் ஜனாஸாக்கள் மட்டுமல்ல. தமிழ், சிங்கள, கிறிஸ்தவ பூதவுடல்களும் தான் எரிக்கப்பட்டது. இப்போது நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட பின்னர் எத்தனை தமிழ் சகோதரர்களின் உடல்கள் மஜ்மா நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் அறிந்து  கொள்ள வேண்டும். உயரிய சபையில் போதிய விளக்கமில்லாமல் பேசியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் கோமா நிலையிலிருந்து வெளியேறி நிதான நிலைக்கு உடனடியாக வர வேண்டும் என்று  கேட்டுக்கொள்கிறேன் என அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா தெரிவித்துள்ளார்.

இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், அரசு தேர்ந்தெடுத்த நிலத்தில் நல்லடக்கம் செய்வதை கூட அனுமதிக்காது போராட்டம் நடத்த மதகுருமார்களை வீதிக்கு இறக்கிய சிலர் இன்று நல்லவர்கள் வேடம் போடுவது வேடிக்கையாக உள்ளது. கி. ஜெயசிறில் முஹம்மது நபியை இழிவுபடுத்திய சம்பவத்தை தானே சமூக வலைத்தளங்களில் வந்து ஒத்துக்கொண்ட காணொளிகள் உலாவந்துகொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தவரை போன்று பேசிக்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தனது சக தமிழ் கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் விசாரித்தே உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.

ஒற்றுமையாக பின்னிப்பிணைந்து வாழும் தமிழ்- முஸ்லிம் உறவை முஹம்மது நபியை விமர்சித்ததன் மூலமும் இன்னும் பல இனவாத செயல்களின் மூலமும் சீரழிக்க எத்தனிக்கும் ஜெயசிறிலை தண்டிக்க வக்கற்று அவரது செயலை கண்டிப்போர் மீது விரலை நீட்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் போன்றவர்கள் மீதி நான்கு விரல்களும் உங்களை நோக்கியே உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு சமாளிப்புகளை செய்தாலும் முஸ்லிங்களை வம்பிழுத்து உப்பு உண்ட ஜெயசிறில் சட்டத்தின் படி தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe