Ads Area

தலையைச் சுற்ற வைக்கும் தலிபான்களின் சர்வதேச உறவு? -சுஐப் எம்.காசிம்.

ஆப்கானிஸ்தானின் எதிர்காலம், ஜனநாயகத்திலா? அல்லது மதவாதத்திலா? கட்டியெழுப்பப்படப்போகிறது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் தலையைச்சொறிந்துகொண்டு தீவிரமாகச் சிந்திக்கும் விடயம்தான் இது. இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த அதே தலிபான்கள், மீண்டும் அரியணையில் அமர்ந்து இலட்சியப் பாதையில் சாதனை படைத்துள்ளமை ஆச்சர்யமானதில்லையா? அதுவும், அமெரிக்காவின் உதவியில் நிறுவப்பட்ட  15 வருட ஆட்சியை வெறும் மதவாதமல்லவா  வீழ்த்தியிருக்கிறது? எவ்வளவு பெரிய படைப்பலமும், பொருளாதாரப்பலமும், இராணுவ யுக்திகளும் இந்த மதவாதத்துக்கு முன்னால் நிலைப்படவில்லை. இதுதானே ஆச்சரியம்.

இதற்காகத்தான், இது பலப்படக்கூடாதென அமெரிக்காவும் ஐரோப்பாவும் விரும்புகிறதோ? இப்போது விரும்பியென்ன பலன்? பெரும் கனவுடன் வளர்க்கப்பட்ட அமெரிக்க சார்பிலான ஆப்கான் அரசு இப்படிப் புரட்டிப்போட்டப்பட்டு விட்டதே! இதுதான், வல்லரசுகளுக்கு வந்துள்ள வருத்தம்.

இத்தனை சக்தியா இந்த மதத்துக்கு? அல்லது தலிபான்கள் விரும்பும் ஆட்சிக்கு? 2006 ஆம் ஆண்டு "பார்மியான் பௌத்த சிலைகளை" உடைத்ததால் வீழ்த்தப்பட்ட தலிபான் அரசு, மீண்டும் அரியணை ஏறுமென யாராவது நினைத்ததா? மீண்டும்  வந்துள்ளவர்கள் அதே ஆட்சியையா அமுல்படுத்துவர்?. இதுதான், எழுந்து வரும் கேள்விகளாகின்றன. எனினும், ஆட்சியை அகற்றிய கையோடு தலிபான்கள் நடந்துகொண்ட விடயங்கள் சற்று முன்னேற்றத்தையே காட்டுகின்றன. இதுவரைக்கும் அங்கு தங்கியிருந்த வெளிநாடுகளின் தூதுவர்களை கௌரவமாக வெளியேற்றியமை, வங்கிகளில் வைக்கப்பட்டிருந்த பணங்களை மீளப்பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்கியமை, அயல் நாடுகளின் குறிப்பாக பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான் மற்றும் இந்தியாவின் உறவுகளைத் தொடர விரும்புகின்றமை எல்லாம், நவீன உலகுடன் இணங்கிச்செல்லும் நல்லெண்ணத் தூதாகத்தான் கருதப்படுகிறது.

தனித்துப் பயணித்ததால், தூக்கி வீசப்பட்ட அனுபவங்களில், தலிபான்கள் சில விடயங்களைக் கற்றுத்தானுள்ளனர். போதை வியாபாரம், சிறுவர் படையணி, தனியான மதக் கல்வி, மட்டுப்படுத்தப்பட்டளவிலான பெண்களின் உரிமைகள், சர்வதேச உறவுகளைப் புறக்கணித்தல்,  ஆட்கடத்தல் இவைகளெல்லாம் அங்கீரிக்கப்பட்ட ஆட்சிக்கு அடையாளமில்லை. இப்போது, கிடைத்துள்ள ஆட்சியதிகாரத்தை தக்க வைக்க, சர்வதேச அங்கீகாரம் கட்டாயம் அவசியப்படும். இதற்கான முதல் முன்னோடியைத்தான் தலிபான்கள் செய்துள்ளனர்.

கல்விப்புரட்சியில் ஆங்கிலம், விஞ்ஞானத்துக்கு மட்டும் அனுமதியளித்துள்ள தலிபான்கள், மேலைத்தேய கல்வியை முற்றாகத் தடுத்து, இஸ்லாத்துடன் முரண்படும் எந்த சிந்தனைகளையும் அனுமதிக்கவில்லை. இத்தனைக்கும், பெண்களுக்கு என்ன சொல்லப்போகிறது இந்தப் புதிய அரசு? வழமையான இறுக்கம் கடைப்பிடிக்கப்பட்டால், ஆயிரக்கணக்கில் பெண்கள் வெளியேறி அயல்நாடுகளுக்குள் தஞ்சம்புகவும் காத்திருப்பதாக அங்கிருந்து வந்த கடைசித் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, ஈரானுக்குள் நுழைந்த பல பெண்கள், துருக்கிக்குள் தஞ்சம்புகக் காத்திருப்பதாகவும் தகவல். ஏற்கனவே, பல நாடுகளின் அகதிகளைக் கையாள்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள சர்வதேசத்துக்கு இதுவும் ஒரு தலையிடிதான். உண்மையில், தலிபான்களைப் புறக்கணிக்க முடியாத நெருக்கடிக்குள் சில அயல்நாடுகள் சிக்கத்தான் போகின்றன. வர்த்தகப் போக்குவரத்துக்கு முக்கியமான பாதைகள், தலிபான் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இந்த அரசை இந்த அயல்நாடுகள் அங்கீகரித்தே ஆக வேண்டும்.

சுமார் 15 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த நேட்டோ படையினர், அந்நாட்டு மக்களுடன் நெருக்கமாகப் பழகவில்லை. ஆக்கிரமிப்பு மனோநிலையில் செயற்பட்ட அமெரிக்க இராணுவத்தினர், சொந்தக் குடிமக்களுக்கு நெருக்கமாகச் செயற்பட்டதில்லை. அங்குள்ள இயற்கை வளங்களை அள்ளிச் செல்லும் இராணுவமாகவும், இஸ்லாத்தை நிந்திக்கும் அல்லது பொருட்படுத்தாத இராணுவத்தினராகவும்தானிருந்தனர். இதனால்தான், எண்ணிச் சில நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானை வீழ்த்த முடிந்தது தலிபான்களுக்கு.

இப்போதுள்ள பிரச்சினை இதுதான். பாகிஸ்தானிலும் இந்த மதவாதம் பற்றிக்கொண்டால், தலிபான்களின் பிடி, பிராந்தியத்தில் பலப்பட்டுவிடும். எனவே, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைப் போன்று, பாகிஸ்தான் விடயத்தில் அமெரிக்கா அலட்சியமாக இருக்காது. இதுவும் இன்னுமொரு நெருக்கடியை சர்வதேசத்தில் ஏற்படுத்தாதிருந்தால் சரிதான்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe