Ads Area

ஓட்டமாவடியில் கொரோனா ஜனாஷா நல்லடக்கம் : வலுக்கும் மாற்றுக்காணிக்கான கோரிக்கை.

நாடளாவிய ரீதியில் கொரோனாவினால் மரணிக்கின்ற ஜனாஷாக்கள் இன்று வரை கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மஜ்மா நகர், சூடுபத்தினசேனையில் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றது. 

அரசினால் கொரோனா ஜனாஷாக்களை அடக்க அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து சுமார் 1,500 க்கும் அதிகமான  ஜனாஷாக்கள் நாடளாவிய ரீதியிலிருந்து கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இப்பணியினை பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் சமய, சமூக நிறுவனங்கள் மிகவும் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகின்றமை சகலரும் அறிந்த விடயம். 

கொரோனா ஜனாஷாக்களை அடக்கம் செய்ய காணி வழங்கியதிலிருந்து இன்று வரை இப்பிரதேச மக்களும் அரச, அரச சார்பற்ற மற்றும் சமூக,சமய நிறுவனங்கள் வழங்கிய வரும் ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு குறைத்து மதிப்பிட முடியாதவை. 

நல்லடக்கம் தொடங்கி ஜனாஷாக்களுடன் வருபவர்களுக்கான உறவினர்களுக்கான தங்குமிடம் மற்றும் ஏனைய உதவிகளை சிறப்பாக வழங்கி வருகின்றமை குறிப்பிட்டாக வேண்டியதே. 

இவ்வாறான சூழலில் கொரோனாவின் வீரியம் அதிகரித்து முதலிரு அலைகளையும் கடந்து மூன்றாவது அலை ஆரம்பித்து டெல்டா தொற்று மரணங்களும் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகின்றது. 

நாளொன்றில் மரண எண்ணிக்கை நூற்றைத் தாண்டியுள்ள நிலையில், அவற்றை உரிய முறைப்படி அடக்கம் செய்ய இடநெருக்கடி நிலையினை தற்போது அடக்கம் செய்யப்பட்டு வரும் சூடுபத்தினசேனை பிரதேசம் எதிர்நோக்கியுள்ளதை சகல மட்டத்தினரும் சுட்டிக்காட்டி மாற்றுக்காணியொன்றினை அடையாளங்காண வேண்டிய வலுவான கோரிக்கையினை முன்வைத்து வருகின்றனர். 

அதே நேரம், பொறுப்பு வாய்ந்த பிரதேச சபையின் அதிகாரத்தரப்பினர் வெறும் ஊடக அறிக்கைகளுடன் தமது முன்னெடுப்புக்களை மட்டுப்படுத்திக் கொண்டதுடன், உரிய தரப்பினரின் கவனத்துக்கு உத்தியோகபூர்வமாக கொண்டு செல்லாமையும் இன்றைய இக்கட்டான நிலைக்கு காரணம் எனலாம்.

அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருக்கப்பட்டிருக்குமானால் மாற்றுக்காணிக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

குறித்த காணி நீண்டகாலத் தேவையின் அடிப்படையில் இப்பிரதேச மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சாதாரண மரணங்கள் சம்பவிக்கின்ற போது, அவைகளை அடக்கம் செய்ய முழுப்பிரதேசத்துக்குமான பொது மையவாடிக்காணி என்ற அடிப்படையில் முறையான அனுமதி பெறப்பட்டதாகும். 

அதன் பின்னர் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலையில் கொரோனா ஜனாஷாக்களை அடக்கம் செய்ய தற்காலிகத் தீர்வுக்காக மனமுவந்து அளிக்கப்பட்டது. 

இருப்பினும், இப்பிரதேசம் பாரிய காணிப்பிரச்சினையக் கொண்ட பிரதேசம் என்பதாலும் இப்பிரதேசத்துக்கான காணி வளங்கள் அபகரிக்கப்பட்டு துண்டாடப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து அபகரிப்புக்கள் இடம்பெற்று வரும் ஒரு பிரதேசமாகவும் காணப்படுவதனால் மாற்றுக்காணியொன்றினை பொருத்தமான இடங்களில் அடையாளப்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற வலுவான கோரிக்கை நியாயமானதே. 

தற்காலிகத் தீர்வுக்காக வழங்கப்பட்ட காணியில் கொரோனா ஜனாஷாக்கள் தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அதிக மரணங்களால் மக்களின் குடியிருப்பு, சேனைப்பயிர்ச் செய்கை நிலங்கள், வயல் காணிகளிலும் ஜனாஷாக்கள் அடக்க வேண்டிய நிலையேற்பட்டு வருகின்றது. 

இதனால் இப்பிரதேசத்தில் வாழும் வறிய மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 

இந்த நிலை தொடருமாக இருந்தால், இப்பிரதேசத்தில் வசிப்போர் மாற்று வழியின்றி அங்கலாய்க்கும் நிலை உருவாகும். இப்பிரதேசம் மயான பூமியாக மாறும்.

கடந்த கால யுத்த சூழலினால் பாதிக்கப்பட்ட மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்காக இப்பிரதேசத்தில் குடியேறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களுக்கான முறையான காணிக்கான அனுமதியைக்கூட துரிதமாக வழங்காமல் இழுத்தடிப்புச் செய்து வரும் நிலையில், அதனை அரச காணியாக அபகரிக்க முயன்றால், பல ஆண்டுகளாகப் பராமரித்து வரும் ஏழை மக்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலையும் உருவாகலாம். 

இவ்வாறான விடயங்களில் கவனஞ்செலுத்தி  மாற்றுக்காணியினைப் பெற முயற்சி துரிதப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. 

இது இப்பிரதேச மக்களின் பிரச்சினை மட்டுமன்று. ஒட்டுமொத்த இலங்கை வாழ் இஸ்லாமிய, இந்து, பெளத்த, கிறிஸ்தவ மக்களுக்குமான பிரச்சினை. 

ஏனென்றால், இதுவரை சகல சமயங்களைப் பின்பற்றும் மக்களின் பிரேதங்களும் இப்பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருவதுடன், கொரோனாவினால் மரணித்த வெளிநாட்டவர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 

ஆகவே, இவைகளைக் கருத்திற்கொண்டு அரசில்யவாதிகள், அரச இயந்திரங்கள், அரச சார்பற்ற மற்றும் சமூக நிறுவனங்கள் மாற்றுக்காணிக்கான கோரிக்கையினை துரிதமாக பரிசீலித்து மாற்றுக்காணியினைப் பெற வேண்டிய சமூகக்கடமையாகின்றது. 

அதே நேரம், கடந்த 25.05.2021ம் திகதி மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹ்மத் தலைமையில் அவரது ஏறாவூர் காரியாலயத்தில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் இங்குள்ள குறைபாடுகள், அங்கு பணிவோருக்கான கொடுப்பனவு, வீதி அபிவிருத்தி, சுற்றுமதில் போன்ற விடயங்களில் அவதானம் செலுத்தப்பட்டதுடன், மாற்றுக்காணிக்கான கோரிக்கை, தேவைப்பாடு தொடர்பில் எதுவும் பேசப்பட்டவில்லை. 

இக்கலந்துரையாடல் அன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தமையினால் இவ்விடயம் முன்னிலைப்படுத்தப்பட்டு பேசப்பட்டிருக்க வேண்டும். 

ஏனென்றால், குறித்த சந்திப்பில் தேசியளவிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், மாற்றுக்காணிக்கான கோரிக்கைக்கான நியாயப்படுத்தல்களை அவர்களும் உணர்ந்து கொள்ளவும் தேசியளவில் சமூகமயப்படுத்தவும் வாய்ப்பாகவும் அமைந்திருக்கும். 

அதே நிலையில், குறித்த முக்கியத்துவமிக்க சந்திப்பில் ஜனாஷா பணிகளை முன்னெடுத்து வரும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் புறக்கணிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, தற்போது ஏற்பட்டுள்ள டெல்டா அலை அதிக மரணங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கான சகல ஆயத்தங்களையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொள்ள வேண்டிய கடப்பாடுள்ளது. 

இக்கட்டான நிலையில் குறித்த காணியை வழங்கிய இம்மக்களின் நியாயபூர்வமான கோரிக்கையினை வலுவானதாகக் கொண்டு துரித தீர்வை நோக்கி நகர சகல தரப்பினரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

காலம் கடந்த ஞானமும் வெள்ளம் தலைக்கு மேலால் போன பிறகு அணைக்கட்ட அடித்தளம் தோண்டும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு, மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அஹ்மத் அவர்களின் இன்றைய ஊடக அறிக்கை ஆறுதலலிப்பதுடன், உடனடி முயற்சிகள் முடுக்கி விடப்பட வேண்டும் தீர்வு எட்டப்பட பிரார்த்திப்போம். 

-எம்.ஐ.லெப்பைத்தம்பி



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe