(அஸ்லம் எஸ்.மௌலானா)
சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி மஸ்ஜிதுல் தெளர் பள்ளிவாயலுக்கு ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் பொதுக்கிணறு ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளிவாயல் நிர்வாகிகள் விடுத்த வேண்டுகோளையேற்று அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரின் ஏற்பாட்டில் வை.டபிள்யூ.எம்.ஏ. (YWMA) நிறுவனத்தின் அனுசரணையுடன் இக்கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
இதனை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் ரஹ்மத் மன்சூர் உட்பட அமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்போது குறித்த பள்ளிவாயலில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் அவர் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன் ரஹ்மத் மன்சூர் முன்னெடுக்கும் சேவைகளுக்கு பள்ளிவாயல் நிர்வாகிகளினால் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டதுடன் விசேட துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பள்ளிவாயல்கள், கோவில்கள், விகாரைகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் பலவற்றுக்கு பொதுக்கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருவதுடன் வசதி குறைந்த குடும்பங்களுக்கு குழாய்நீர் இணைப்பு, நிலக்கீழ் அடி தண்ணீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.