Ads Area

கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை : சோதனை மேல் சோதனையை அனுபவிக்கும் மீன்பிடித்துறை !!!

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஆசியாவின் ஆச்சரியமிகு நாடான இலங்கை தீவில் மீன்பிடி முக்கிய பாத்திரம் வகிக்கும் பிரதான தொழில்களில் ஒன்று. அதிலும் வடக்கு கிழக்கில் மீன்பிடி என்பது சிறப்பம்சங்கள் நிறைந்த ஒன்றாகவே வரலாற்று நெடுகிலும் இருந்து வந்துள்ளது. இந்த மீன்பிடியில் பல லட்சக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். "கடலுக்குள் போனால் பிணம் வெளியே வந்தால் பணம்" எனும் கதையை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் இந்த கட்டுரையின் வாசல் கேள்வியாக முன் வைக்கிறேன்.

கிழக்கில் மீன்பிடி என்பது எப்போதும் முதன்மையான தொழிலாகவே இருந்து வருகிறது. அதனாலையே அழகிய மட்டக்களப்பு மாவட்டம் "மீன்பாடும் தேனாடு" என சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. அந்த தேனாட்டில் மீன் பாடாமல் சில நேரங்களில் துப்பாக்கியும், திருடர்களும் பாடுகிறார்கள் என்பதையே இந்த கட்டுரை இன்று அலசுகிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீன்பிடி வள்ளங்கள், இயந்திரங்கள், வலைகள் அடங்களாக மொத்தம் 50 தொடக்கம் 60 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் தான் கடலில் மிதந்து கொண்டிருப்பது. கடலலையுடன் போராடி தோனியில் சவலடித்து காற்றின் திசையறிந்து துடுப்பை சுழற்றி பெரிய இயந்திர படகில் தினமும் மாலையில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இரவுமுழுவதும் விழித்திருந்து கடுமையான காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி கஷ்டப்பட்டு பிடிக்கும் மீன்களை நொடிப்பொழுதில் ஒரு திருட்டுக்கும்பல் கொள்ளையடித்து சென்றால் எப்படி இருக்கும் நிலை என்பதை நாம் மனக்கண்ணில் எண்ணிக்கொள்வோம். மீன்கள் திருடப்படும் போது எங்களின் நிலைகளை கூறி மன்றாடிய நாட்களும் துப்பாக்கி முனையிலும் நாங்கள் மிரட்டப்பட்ட சம்பவங்களும் கடலில் அதிகமாகவே நடந்துள்ளது என மனவேதனைப்படும் மீனவர்கள் சொல்லும் கண்ணீர்கதையை இன்றைய நாளிதழ் உங்களுக்கு தருகிறது.

நிர்வாகத்தை கட்டமைக்கும் நோக்கில் குறித்த சில பிரதேசங்களை உள்ளடக்கி "துறை" எனும் நிர்வாக அலகு மீனவர்கள் மத்தியில் உள்ளது. இதனடிப்படையில் அம்பாறை மாவட்டம் 08 துறைகளை கொண்டுள்ளது.  2007 ஆம் ஆண்டு முதல் கடலில் மீன் திருடும் சம்பவங்கள் நடக்கிறது. இது விடயமாக கடந்த ஜனாதிபதி முதல் சகல தரப்பினருக்கும் அறிவித்துள்ளோம். இப்போதுள்ள அரசாங்க பிரதானிகள், பாதுகாப்பு படை பிரதானிகள் வரை அறிவித்துள்ளோம். இந்த விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா, எச்.எம்.எம். ஹரீஸ், முஷாரப் முதுனபின் உட்பட பலரிடமும் நேரடியாக சந்தித்து இவ்விடயங்களையும், மிக நீண்ட கால தேவையான துறைமுக பிரச்சினைகளையும் பேசினோம். அவர்கள் செய்து தருவதாக கூறியுள்ளார்கள்.ஆனால் எதுவும் நடந்த பாடில்லை என அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப்படகு மீன்பிடி உரிமையாளர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மீராசாஹிப் அப்துல் ஹமீட் (நஸீர்) தெரிவிக்கிறார்.

ஒருநாள் கடல் தொழில் செலவாக எரிபொருள் செலவு உட்பட 15-20 ஆயிரம் செலவாகிறது. எரிபொருளின் விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் அப்பாவி மீனவ சமூகமாகிய எங்களை மரத்தால் விழுந்தவை மாடு மிதித்த கணக்காக திருடர்களும் தங்களின் கைவரிசை காட்டுகிறார்கள் என்கின்றனர் கல்முனை பிராந்திய மீனவர்கள். மீன்பிடி தொழிலில் முதலாளியை தவிர்த்து நால்வர் ஒருநாள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகிறார்கள். நித்திரை விழித்து பிள்ளைகளினதும் எங்களினதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடலில் கஷ்டப்பட்டு பிடிக்கும் மீனை இலகுவாக வந்து சொகுசாக திருடி செல்கிறார்கள். இரவு 11- 12 மணியளவில் 40-45 குதிரைவலு கொண்ட இரண்டு மோட்டார் எஞ்சினை பொருத்திய சிறிய ரக படகை கொண்டு இந்த செயலை செய்து வருகிறார்கள். அதிக எடை கொண்ட கொப்புறு, தளப்பத்து போன்ற விலை கூடிய 100 /150 கிலோ எடைகொண்ட மீன்களை தினமும் திருடும் இவர்கள் அந்த மீன்களை ஆறுதலாக கலட்டிக்கொண்டு நிற்க நேரமில்லாததால் வலையுடன் சேர்த்து அறுத்து கொண்டு செல்கிறார்கள். ஒருநாளில் அவர்கள் பயணிக்கும் அந்த பாதையில் உள்ள 50/60 படகுகளின் வலைகள் இப்படி காவுகொள்ளப்படுகிறது.

இதனை செய்வது ஒரு படகல்ல 10- 20 படகுகள் இணைந்தே இதை செய்கிறார்கள். இது ஒரு வலையமைப்பின் கீழ் நடைபெறுகிறது. இவர்களை இயக்குபவர்கள் பிரதானமாக ஓரிருவரே. இந்த திருட்டு வேலையை கடலில் இறங்கி செய்பவர்களுக்கு உயர் போதை தரும் மதுபானங்கள் வழங்கப்படுகிறது. அதனால் என்ன செய்கிறோம் என்பதை கூட  உணர முடியாதவாறு முழு போதையில் தான் அவர்கள் கடலில் இந்த வேலையை  செய்கிறார்கள். எங்கள் வலையிலிருந்து மீன்கள் களவாடப்படும் போது துண்டாடப்படும் வலையை மீளவும் பயன்படுத்த தயார்படுத்தலுக்காக ஐந்து ஆறு நாட்கள் எடுக்கிறது. அதற்கான ஆள்கூலி 2000, சீரமைக்க எடுக்கும் செலவுகள் என்பனவும் வீணான அநியாய செலவாக வருகிறது. இதனால் ஒரு தடவை மீன் களவு போகும் படகு மீன்களை மட்டுமின்றி 20000 ரூபாய் அளவில் பணத்தையும் இழக்கிறது. அந்த நாட்களின் தொழிலும் இல்லாமலாக்கப்படுகிறது. என மீனவர்கள் தனது கண்ணீர் கதையை ஆரம்பிக்கின்றனர்.

இது தொடர்பில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கொரோனா அலை இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த காலப்பகுதியில் அம்பாறை, மட்டக்களப்பு  மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஆழ்கடல் மீனவர் சங்கங்கள், மீனவர் சமாசங்கள், மீனவர் சம்மேளனங்கள் ஆகியன இணைந்து சாய்ந்தமருதில் நடாத்திய மீன் திருட்டை ஒழிப்பது தொடர்பிலான சந்திப்பில் கலந்துகொண்டு மீனவர்கள் மத்தியில் பேசிய  கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜெமீல் முகம்மட் சட்டநடவடிக்கை எடுக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் இயற்கையுடன் போராடி அன்றாட வாழ்வாதரத்தை கொண்டு செல்ல மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் செயற்பாட்டை இனியும் அனுமதிக்க முடியாது என  தெரிவித்தார். மேலும் சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் இலகுவாக தப்பிவிட முடியாது. இலங்கை கடற்படை, விசேட அதிரடி படை, பொலிஸாரின் கூட்டு முயற்சியில் இந்த திருட்டு நடவடிக்கைகளை ஒழிக்க விசேட திட்டத்தை செயற்படுத்தி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர உறுதியளிப்பதாக தெரிவித்தார். ஆனால் இன்றுவரை இந்த பிரச்சினை நீள்வது துரதிஸ்டவசமானது.

மட்டக்களப்பு மாவட்ட  களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேத்தாத்தீவு உட்பட அதை அண்டிய பிரதேசங்களிலையே ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருட்டு போவதாகவும் 40 (மணிக்கு 40 கிலோமீட்டர்) குதிரை வேகம் கொண்ட சிறியரக மீன்பிடி படகுகளை கொண்டே இந்த திருட்டு சம்பவங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும். மீன்களுடன் சேர்த்து மீன்பிடி வலைகளையும் வெட்டி எடுத்து செல்வதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களிலும், கடற்படை தளங்களிலும், இராணுவ முகாம்களிலும், கடற்தொழில் திணைக்கள அலுவலகங்களிலும் பதிவாகியுள்ளன. ஆனால் நடவடிக்கை எதுவும் திருப்திகரமாக இல்லை. அரச அதிகாரிகள் கண்டும் காணாமல் விடுகிறார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. திருடிக்கொண்டு வரும் மீன்களை பாதுகாப்பு தரப்புக்கு முன்னிலையில் பகிரங்கமாகவே விற்கிறார்கள். அவர்களின் படகில் போலியாக எடுத்துக்கொண்டு திரியும் வலைகளுக்கும், அவர்களின் படகுகளில் தினம் காலையில் வரும் மீன்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்காது என்கிறார்கள் மீனவர்கள்.

அந்த மீன் திருடர்கள் கைதானாலும் சில மணித்தியாலயங்களிலையே விடுதலையாகிறார்கள். அது எப்படி என்பதுதான் எங்களுக்கு புரியாதுள்ளது. பல மில்லியன்களை கொண்டு தொழிலை ஆரம்பித்து செய்துகொண்டிருக்கும் எங்களுக்கு தொடர்ந்தும் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் படுபாதாளத்தை நோக்கி செல்கிறது. இதனால் அடுத்ததாக என்ன செய்வது என்று அறியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள் மீனவர்கள். எரிபொருள் மற்றும் ஏனைய செலவுகளை செய்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றால் பிடிபடும் மீன்களையும் இவர்கள் திருடிச்சென்றால் கடலுக்கு தொழிலுக்கு சென்ற மீனவர்கள் என்ன செய்வது? அல்லது இதை நம்பி முதலீடு செய்த முதலாளிகள் என்ன செய்வது? ஒவ்வொரு மீன்பிடி படகு முதலாளிகளும் பல மில்லியன் ரூபாய் கடன்காரர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மத நம்பிக்கை படி தற்கொலை செய்ய முடியாது என்பதனால் பல சிக்கல்களுடன் உயிருடன் இருக்கிறார்கள். இந்த மீன் கொள்ளை பிரச்சினையினால் 10 நாளைக்கு ஒருதடவை 02 லட்சம் ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்படுகிறது என்கின்றனர் மீனை பறிகொடுக்கும் மீனவர்கள்.

கல்முனை முதல் அக்கறைப்பற்று வரையான கடற்பகுதிகளில் 350-400 இயந்திரப்படகுகள் அளவில் உள்ளது. இந்த இயந்திரப்படகுகளினால் நேரடி நன்மையடையும் குடும்பங்கள் 20 ஆயிரம் அளவில் உள்ளது. இந்த கடற்கொள்ளையினால் ஆழ்கடல் மீனவர்கள், முதலாளிகள், மீன் வியாபாரிகள், இவர்களை நம்பி உதவி செய்தோர் என பல்வேறு தரப்பினரும் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். பல தசாப்த பிரச்சினையாக இருந்துவரும் ஒலுவில் துறைமுக பிரச்சினையை தீர்க்க போராடிக்கொண்டிருக்கும் எங்களுக்கு இப்போது இந்த பிரச்சினையும் தலையில் ஏறி அமர்ந்து கொண்டுள்ளது.

போதாக்குறைக்கு இப்போது சுருக்கு வலையில் மீன்பிடிக்கும் நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள இந்த மீன்பிடி முறையை சட்டவிரோதமான முறையில் மின்குமிழ்கள், சிறிய ரக படகுகளை கொண்டு அதே கும்பல் சுருக்கு வலையில் மீன்பிடிக்கின்றனர். இது சம்பந்தமாக அதிகாரிகள் தெரிந்தும் மௌனமாக உள்ளார்களா என சந்தேகம் கொள்ளும் மீனவர்கள் இந்த வலையில் மீன்பிடிப்பதனால் சிறிய மீன்கள் கூட இந்த சுருக்கு வலையில் அள்ளுண்டு செல்வதனால் பெரிய மீன்கள் பிடிபடும் வீதம் குறைவு என்கிறார்கள். கரைவலை மீனவர்களின் வலையில் சிக்கக்கூடிய கீறி, பாறைக்குட்டி போன்ற மீன்களை இவர்கள் சட்டவிரோதமாக வந்து அள்ளிக்கொண்டு செல்வதனால் கரைவலை மீனவர்களும் பாரிய தொழில் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

மீன்பிடி உபகரணங்கள் எல்லாவற்றுக்கும் விலைகள் அதிகரித்துள்ளன. வருடக்கணக்கில் பாவித்த உபகரணங்கள் இப்போது மாதக்கணக்கிலையே பாவிக்குமளவுக்கு தரமற்ற பொருட்களே கிடைக்கிறது. தரமான பொருட்கள் கூட சந்தையில் இல்லாத சூழ்நிலையே இப்போது உருவாகியுள்ளது. அரசினால் மானியங்கள் கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. மீன்பிடி தொழில் அழியும் நிலையே இப்போது உருவாகியுள்ளது என மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர். கடலில் மீன் கொள்ளை, கரையில் விலையேற்றம் என திண்டாடிக்கொண்டிருக்கும் நாங்கள் மரபு விவசாயிகள் போல இன்றைய நாட்களில் தத்தளித்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை தொடர்ந்து விவசாயமும், மீன்பிடியும் செயலிழந்தால் வளமிக்க எமது நாடு ஏனைய நாடுகளிடம் கையேந்தும் நிலையே வரும்.

எங்களின் பிரச்சினைகளை பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு மீன்பிடி அமைச்சுக்கும், திணைக்களங்களுக்கும் அறிவித்துள்ளோம். எங்களின் பிரச்சினைகளை ஓரக்கண்ணால் கூட அதிகாரிகள் பார்க்கிறார்கள் இல்லை. நாங்கள் சந்தித்த எல்லா மீன்பிடியமைச்சர்களும் பொய்யான வாக்குறுதிகளையே தந்து ஏமாற்றினார்கள். மிகவும் நொந்த நிலையிலையே தான் மீனவர்கள் இருந்துகொண்டிருக்கிறோம் என்ற மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரியொருவர் கருத்து கூறும் போது :

2009 இல் இருந்து இந்த மீன் கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. இந்த மீன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செட்டிபாளையம், தேத்தாத்தீவு போன்ற பிரதேசங்ககளை சேர்ந்தவர்களே இந்த செயலில் ஈடுபட்டு வருவதாகவும், மீனவர்கள் கூறும் விடயங்கள் உண்மை என்பதையும் உறுதிப்படுத்தினார்.

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் காத்தான்குடி பிராந்திய மீன்பிடி சங்க செயலாளர் ஹஜ் முகம்மத் கருத்து தெரிவிக்கும் போது : மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறத்தாழ 600 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களின் படகுகளிலிருந்து கடந்த 10-12 வருடகாலமாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட கடலில் இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. இந்த திருடர்களை பிடிக்க தேத்தாத்தீவு மக்களே  உதவினார்கள்.  அந்த மக்கள் அடையாளம் காட்டியதும் அங்கு சென்று பார்த்தோம். அப்போது அங்கு பெரிய மீன்பிடிக்கு பாவிக்கும் எவ்வித உபகரணங்களும் இருக்கவில்லை. 20-30 மீட்டர் அளவுகொண்ட வலைகளே அவர்களிடம் உள்ளது. அதை வைத்து அவர்களினால் பெரிய மீன்களை பிடிக்க முடியாது. எங்களிடமிருக்கும் 50 கட்டு வலையில் 01 கட்டு அளவு கூட அவர்களிடமில்லை. அப்படி இருக்க  அவர்களினால் எப்படி சாத்தியமானது? 02-2.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட எங்களின் வலையில் பிடிபட்டு இருக்கும் மீன்களை வலையோடு அறுத்துக்கொண்டு செல்கிறார்கள் என்றார்.

கொள்ளைக்காக ஒரு படகுடன் ஆரம்பித்த இந்த கும்பல் இப்போது 10 சிறிய இயந்திரப்படகுகளை கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் தடித்த உயர்ந்த தோற்றத்தை உடையவர்களே இந்த செயலில் ஈடுபட்டு வருவதாகவும் கருத்த துணியால் முகத்தை மூடியுள்ளார்கள் என்கின்றனர் கொள்ளை சம்பவத்தை அனுபவித்த மீனவர்கள். மாங்காடு பிரதேசத்தில் இருந்து 03 படகுகளும், தேத்தாத்தீவிலிருந்து 04 படகுகள், களுவாஞ்சிகுடியிலிருந்து 03 படகுகள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்கின்றார்கள் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள்.

இவர்கள் எல்லோரையும் இயக்குபவர் தேத்தாத்தீவு சின்னத்தம்பி எனும் நபரே. அவரே இந்த மீன்கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார். அவரை நாங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்து நீதிமன்றத்தில்  அவருக்கு எதிராக நான்கு வழக்கும் நடைபெற்றது. அவர்களின் வலைகளை காரணமாக காட்டி தகுந்த ஆதாரங்கள் இல்லையென கூறி நீதிமன்றமும் வழக்கை முடித்து அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பை முன்வைக்கிறது. இதனால் நாங்கள் நஷ்டத்தை அனுபவிக்க அவர்கள் கோடிக்கணக்கில் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மாதம் 30-40 லட்சம் உழைக்கிறார்கள் என்கிறார் காத்தான்குடி பிராந்திய மீன்பிடி சங்க செயலாளர் ஹஜ் முகம்மத்.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 850 ஆழ்கடல் படகுகள் அளவில் உள்ளது. இந்த கொள்ளையர்கள் தினமும் 70-80 கிலோ மீட்டர் பயணித்து இந்த கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இந்த திருட்டை நிறுத்தவேண்டும் என்று கோரி தேத்தாத்தீவு கோவில் நிர்வாகத்தினருக்கு அறிவித்து அவர்களூடாக மேற்கொண்ட நடவடிக்கைகளும் வெற்றியளிக்கவில்லை. இனி இந்த செயலில் ஈடுபடப்போவதில்லை என்று சத்தியமிட்டத்தை நம்பி வழக்கொன்றை தான் வாபஸ் பெற்றதாக மட்டக்களப்பு மாவட்ட மீனவர் ஒருவர்  தெரிவித்தார். மேலும் மட்டக்களப்பு மீன்பிடி இலாகா அலுவலக முன்றலில் வைத்து தனது மனைவி, மக்களின் மீது சத்தியமிட்டு கூறினார் இனி திருந்தி வாழப்போவதாகவும் பெரிய படகொன்றை வாங்கி நேர்மையாக வாழப்போவதாகவும். அதை நம்பியே நான் வழக்கை வாபஸ் பெற்றேன். அதையெல்லாம் மீறியே அவர் இதனை தொடர்கிறார் என்கிறார் அவர். நாட்டின் தற்போதைய எண்ணெய் விலை, வாழ்வாதார செலவுகள் காரணமாக ஒரு தடவை கடலுக்கு பயணிக்கும் எங்களுக்கு 10-15 ஆயிரம் வரை மட்டுமே மீன்பிடி இருந்தால் மீதிப்பணம் நஷ்டத்திலையே போகிறது என ஏங்கும் மீனவர்கள் கடனை எப்படி திருத்தி செலுத்துவது என்ற கவலையுடன் இருக்கிறார்கள்.

இது தொடர்பில் அரசியல்வாதிகளின் உதவியை நாடிய மீனவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவை சாய்ந்தமருதிலும், கல்முனையிலும் சந்தித்தனர். அந்த சந்திப்பில் மீன் களவுடன் இணைந்ததாக ஒலுவில் துறைமுகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அம்பாறை மாவட்ட கரையோரங்கள் கடலரிப்புக்கு இலக்காகி மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளமை, ஒலுவில் துறைமுகத்தில் மண்வார்ப்பு உள்ளதால் இயந்திர படகுகளை தரித்து நிறுத்துவதில் உள்ள சிக்கல்கள், மீன்பிடியில் பிராந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி மிக ஆழமாக அம்பாறை மாவட்ட மீனவர் சங்கங்களின் சமாச, மற்றும் சம்மேளன பிரதிநிதிகள் தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவுக்கு தெளிவுபடுத்தினர். சகல விடயங்களையும் விரிவாக ஆராய்ந்து கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா இவ்விடயங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலந்துகொண்டிருந்த மீனவர்களுக்கு நம்பிக்கை வெளியிட்டார். ஆனால் வருடங்கள் கடந்தும் இன்றும் நிலை தொடர்கிறது.

அதன் தொடர்ச்சியாக கோத்தா அரசின் நேரடி எதிரிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன், சாணக்கியன், கலையரசன் போன்றோரை அண்மையில் மாளிகைகாட்டுக்கு அழைத்து வந்து மீனவ சமூகம் தன்னுடைய குறைகளை கூறி ஒப்பாரி வைத்தது. ஆனால் அவர்கள் கல்முனை பிரதேச செயலக விவகாரத்தையும், 20க்கு கையுயர்த்திய முஸ்லிம் எம்.பிக்கள் பற்றியும், மலையக சிறுமி பற்றியும் கதைத்தார்களே ஒழியே பெரிதான தீர்வொன்றையும் இங்கு வழங்கவில்லை. போதாக்குறைக்கு வீதிமறியல் போராட்டம் நடத்த ஆலோசனை வழங்கினார் சாணக்கியன். அரசியல் நோக்கத்தை மையமாக கொண்டு. பெரிய எதிர்பார்ப்புடன் அழைத்துவந்த அஜந்தாக்கள் எல்லாம் சீரோவாக இருக்க அரசனை நம்பி புருஷனை கைவிட்ட நிலையில் இருக்கிறார்கள் கிழக்கு மீனவர்கள். ஆளும் தரப்பு கிழக்கு எம்.பிக்களின் கோபத்தை சம்பாதித்தவற்றை தவிர தமிழ் கூட்டமைப்பின் சந்திப்பும் வெற்றியளிக்கவில்லை. சில நாட்களுக்கு முன்னர் மத்திய வங்கியுடன் மீன் கொள்ளையை ஒப்பிட்டு ஒரு வசனத்தை மட்டும் பாராளுமன்றத்தில் உதிர்த்து விட்டார் சாணக்கியன்.

பல லட்சங்களை கடலில் போட்டுவிட்டு பெரிய குழப்பத்துடன் தினமும் கடலுணவை வழங்கும் மீனவர்களாகிய எங்களின் பிரச்சினைகள் நீளாது விரைவாக முடிக்கப்படல் வேண்டும். தினமும் கடலை நம்பி வாழும் எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் நிம்மதியான ஒரு வாழ்வை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். சுமூகமான முறையில் எங்களது தொழிலை செய்ய இலங்கை அரசாங்கம் வழிசமைக்க வேண்டும். இந்த கடற்கொள்ளையர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு எங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும். எனும் மீனவர்கள் ஒரு நாளைக்கு பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது இந்த மீனவர்களுக்கு அரசாங்கம் வாங்கப்போகும் வழிவகை என்ன என்பதே இங்கு உள்ள முக்கியமான கேள்வியாக உள்ளது.

எங்களின் பிரச்சினைகள் அமைச்சரின் காதிலோ அல்லது அமைச்சின் அதிகாரிகளின் காதிலோ சரியாக விழ வில்லை போலும். இதனால் நஷ்டத்தில் இயங்கிய நூற்றுக்கணக்கான ஆழ்கடல் மீன்பிடி இயந்திர படகுகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. அதை வாங்க யாரும் தயாராக இல்லை. மீனவர்களும் மீன்பிடியை கைவிட்டு வேறு தொழிலை நாடி செல்கிறார்கள் அல்லது அரேபிய நாடுகளுக்கு தொழிலுக்காக செல்கிறார்கள் என்கிறார் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப்படகு மீன்பிடி உரிமையாளர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மீராசாஹிப் அப்துல் ஹமீட் (நஸீர்).

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட அழகிய இலங்கை தீவு மக்கள் தகர போத்தல்களில் அடைக்கப்பட்ட மீன்களை இலங்கைக்கு இறக்குமதி செய்து உண்ணும் காலம் கனிந்து வருகிறது. ஆரோக்கியமான மீன்களை இலங்கையர்கள் உண்ண முடியாத சூழ்நிலை இலங்கையில் இப்போதைய நாட்களில் உருவாகி வருகிறது. அண்மையில் கடலில் இடம்பெற்ற கப்பல்களின் எரிவு காரணமாக வெளியான எண்ணெய் கசிவுகளினால் கடல் சமநிலை குலைந்துள்ளது. மீன்கள் பெரிதாக வலையில் சிக்குவதில்லை. அப்படி சிக்கினாலும் விலையில் சரிவுள்ளது. வடக்கு கடலில் இந்திய மீனவர்களின் பிரச்சினை. கிழக்கு கடலில் கடல் கொள்ளையர்களின் பிரச்சினை. நாட்டில் அரசியல் பிரச்சினை என பிரச்சினைகள் தலைதூக்கியுள்ள இந்த காலத்தில் மீனவர்களின் குரல் காலிமுகத்திடலில் அமர்ந்துள்ள ஜனாதிபதிக்கு கேட்குமா? இல்லை அலரி மாளிகைக்கு கேட்குமா? அமைச்சர் டக்ளஸ் எடுக்கப்போகும் அவசர நடவடிக்கை என்ன?

பருத்தி மரத்தின் காய் பழுத்தடும் என்று உண்ணக் காத்திருந்த கிளி போல தீர்வுக்காக காத்திருக்கும் மீனவர்களின் வாழ்வுக்கு இலங்கை அரசாங்கம் நல்ல முடிவை விரைவில் தீர்வாக வழங்க வேண்டும். திருடர்கள் இல்லா கடலில் மீனவர்கள் சந்தோசமாக மீன்பிடிக்க வேண்டும். காலம் உதவட்டும். மகிழ்ச்சி  பொங்கட்டும்.

கட்டுரை தொகுப்பு : நூருல் ஹுதா உமர்

(மாளிகைக்காடு செய்தியாளர்)



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe