ஐக்கிய அரபு அமீரகத்தில் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே தற்பொழுது அமீரகம் திரும்ப அனுமதி வழங்கப்படும் என்பதை ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனங்களான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் எத்திஹாட் ஏர்வேஸ் தங்களின் சமூக ஊடக அறிவிப்பில் மீண்டும் உறுதிசெய்துள்ளன.
அதன் படி, இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்று அமீரகம் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் தற்போது அமீரகம் திரும்ப முடியாது. இதே நிபந்தனைகள் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் சினோபார்ம், அஸ்ட்ராஜெனெகா, மாடர்னா, ஸ்புட்னிக் V மற்றும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் கடந்த வாரம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு பயணத்தடையில் புதிய விலக்குகளை அறிவித்தனர்.
புதிய விதிகள் அறிவிக்கப்பட்டவுடன் அமீரகம் திரும்ப விரும்புபவர்களின் முதல் கேள்வியாக இருந்தது தங்கள் நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அமீரகம் பயணிக்கலாமா என்பதுதான்.
“ஐக்கிய அரபு அமீரகத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்புடைய அதிகாரிகளால் வழங்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்கும் செல்லுபடியாகும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பு விசா உள்ள பயணிகள் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்” என்று எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மாடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு நபரின் கேள்விக்கு பதில் கூறியது.
“இந்தியாவில் இருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் துபாய்க்கு பயணம் செய்ய ஏதேனும் வாய்ப்பு உள்ளதா” என்று கேட்ட ராஜீவ் என்ற மற்றொரு நபருக்கு விமான நிறுவனம் இதே விதிகளை மீண்டும் வலியுறுத்தியது. இருப்பினும், விதிமுறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இதனால் புதுப்பிப்புகளுக்காக விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், எத்திஹாட் ஏர்வேஸ் இதே போன்ற கேள்விகளுக்கு பதில் கூறுகையில், “நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவீர்கள். பயணத்திற்கு 14 நாட்களுக்கு முன்னர் அமீரகத்திற்குள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்க வேண்டும்,” என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.
அத்துடன் துபாய் குடியிருப்பாளர்கள் GDRFA ஒப்புதலும் மற்ற அமீரக குடியிருப்பாளர்கள் ICA ஒப்புதலும் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
Thanks - Khaleej Tamil.