பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
கொரோனா அனர்த்த நிலைமையினையடுத்து நாட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்திலும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட நீரோடும் வடிகான்களில் தேங்கியுள்ள மண், குப்பைகள் அகற்றும் செயற்இட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தினமும் பகலும் இரவு வேளையிலும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபையின் வேலைப்பிரிவு சுகாதாரப்பிரிவு மற்றும் திண்மக்கழிவகற்றும் பிரிவு என்பன துரிதமாகச் செயற்பட்டு வருகின்றன.
கனரக வாகனத்தின் உதவியுடனும் வடிகான்களில் நீண்ட காலமாக தேங்கிக் காணப்பட்ட கழிவுகள் விரைவாக அகற்றப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் பருவகாலம் ஆரம்பமாகவுள்ளமையினால் மழை நீர் வடிந்தோடி கடல் ஆறுகளை அடைவதற்கு ஏற்பாடு செய்யும் வகையில் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறு வடிகான்களிலிருந்து அகற்றப்படும் மண் உள்ளிட்ட திண்மக்கழிவுகள் மாநகர பகுதிகளில் சீரற்றுள்ள பாதைகளை செப்பனிடுவதற்காக கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன.
கொரோனா அச்சுறுத்தலிலும் மாநகர சபை ஊழியர்கள் இச்செயற்பாட்டினை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவுறுத்தலுக்கமைய மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சாரின் வழிகாட்டலில் மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அர்சாத் காரியப்பர் நெறிப்படுத்தலில் இப்பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இச்செயற்பாடு கல்முனை மாநகர சபைக்குச் சொந்தமான பொதுச்சந்தையை சூழவுள்ள வடிகான்கள் கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை, சாய்ந்தமருது உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வடிகான்களில் தேங்கியுள்ள கழிவுகளும் விரைவாக துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.