சவுதி அரேபியாவின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GACA) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் முழு திறனுடன் விமான நிலையங்களை இயக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்றால் விமான நிலையங்கள் அனைத்தும் குறிப்பிட்ட எண்ணிக்கை விகித்ததிலேயே செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் விமான நிலையங்களில் இயங்கும் தனியார் விமானப் போக்குவரத்து உட்பட அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க சவூதி தனது விமான நிலையங்களின் முழுத் திறனையும் பயன்படுத்தும் என்று GACA தெரிவித்துள்ளது.
பயணிகளின் நோய்த்தடுப்பு நிலை அதிகாரப்பூர்வ கொரோனா தொடர்பு தடமறிதல் செயலியான தவக்கல்னா (Tawakkalna) அப்ளிகேஷன் மூலம் தொடர்ந்து சரிபார்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சவூதியில் தினசரி நோய்த்தொற்றுகளில் கூர்மையான வீழ்ச்சி மற்றும் தடுப்பூசிகளில் கணிசமான வளர்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக, ஞாயிற்றுக்கிழமை சவூதி அரசு பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தளர்வு நடவடிக்கைகளில் மக்கள் இனி திறந்த இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி SPA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் அரசாங்கம் சமூக தொலைதூர நடவடிக்கைகளை நீக்கியதுடன் மக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரண்டு புனித மசூதிகளில் முழு அளவிலான தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டவர்களுக்கு 100 சதவிகித திறனில் வருகை புரிய அனுமதி வழங்கியுள்ளது.
மூடப்பட்ட பகுதிகள் போன்ற தவக்கலனா செயலி மூலம் உடல் நிலை சரிபார்ப்பு பொருந்தாத இடங்களில் சமூக தூரத்தை பராமரிப்பது மற்றும் முக கவசம் அணிவது தொடர்ந்து பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி - https://www.khaleejtamil.com/