சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை கல்லரிச்சல் பிரீமியர் லீக் 2021 கிண்ண சுற்றுப் போட்டிக்கான வெற்றிக் கிண்ணம் மற்றும் அணிகளின் சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வொன்று நேற்று சம்மாந்துறை தாருஸ்ஸலாம் மஹா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
சம்மாந்துறை வரலாற்றில் முதன் முறையாக ஐக்கியத்தின் அடையாளமாய் 18 விளையாட்டுக் கழகங்களிலிருந்து திறமையான வீரர்களை உள்ளடக்கிய Painand Boys, Latheef Legends, Gazzaly Kings, Salam warriors and kingsley Heroes ஆகிய 5 அணிகள் பங்குபற்றும் மாபெறும் கிரிக்கட் சுற்றுப் போட்டி ஒன்று இடம் பெறவுள்ளது. இக் கிரிக்கட் சுற்றுப் போட்டியினை முன்னிட்டு அதற்கான வெற்றிக் கிண்ணமும், 5 அணிகளது சீருடைகளையும் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
கல்லரிச்சல் கிங்ஸ் XI விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.சி.எம். நயீம் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில், அதிதிகளாக ஆசிய அபிவிருத்தி வங்கி உத்தியோகத்தர் அஸ்மி யாசீன், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் நளீம் ஜனாப், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. அப்னான் மற்றும் சம்மாந்துறை கஸ்ஸாலி வித்தியாலய அதிபர் யூ.எல். றபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அஸ்மி யாசீன் அவர்கள்,
சம்மாந்துறை விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டுத் திறமைகளை சர்வதேச ரீதியிலும் தடம் பதிக்க வேண்டும் என தெரிவித்தார். 1948ம் ஆண்டு சம்மாந்துறையைச் சேர்ந்த சரீப் என்ற வியைாட்டு வீரர் நிவுஸ்சிலாந்தில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்றில் பங்குபற்றியமைக்காக இலங்கைச் சாம்பியன் என்ற பட்டத்தினைத்தினைப் பெற்று சம்மாந்துறை மண்ணை கௌரவப்படுத்தியுள்ளார். அதே போல் எமது இளைஞர்களும் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற முயற்சி செய்து எமது மண்ணை கௌரவப்படுத் வேண்டும்.
ரணதுங்க கருணானந்த என்ற இலங்கையைச் சேர்ந்தவர் 1964ம் ஆண்டு இடம் பெற்ற ஒலிம்பிக் போட்டியில் பத்தாயிரம் மீட்டர் போட்டியில் பங்குபற்றியிருந்தார் அதில் அவர் 1ம், 2ம், 3ம் என்ற வெற்றியினை அடையாவிடினும் தனது நாட்டுக்கு பெருமை சேர்க்குமுகமாக தனது முயற்சியினைக் கைவிடாது பத்தாயிரம் மீட்டர் துாரம் ஓடி முடியும் வரையிலும் தன்னுடைய இலக்கினைப் பூர்த்தி செய்திருந்தார் இதன் காரணமாக ஜப்பானிய பாடசாலை புத்தகம் ஒன்றில் அவரது வரலாறு இடம் பெற்று சரித்திரம் படைத்திருக்கிறது. ஆகவே எங்களது முயற்சிகள் வெற்றியளிக்காவிட்டாலும் துாய நோக்கத்துடன் நாம் செய்யும் முயற்சிகள் வரலாறுகளில் இடம் பெறும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மேலும் கல்லரிச்சல் பிரீமியர் லீக் 2021 கிண்ண சுற்றுப் போட்டிக்கான வெற்றிக் கிண்ணம் சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுர வடிவில் இடம் பெற்றிருப்பது எமது ஊரின் அடையாளம் ஒன்றை நிலைநிறுத்தியுள்ளது, இந்த சந்தர்ப்பத்தில் எமது மணிக்கூட்டுக் கோபுரத்தை கட்டி முடிக்க பாடுபட்ட மறைந்த யூ.எல்.எம். முகைடீன் அவர்களையும் நாம் நினைவு கூற வேண்டியது கடமையாகும் எனவும் தெரிவித்தார்.







