மியான்மரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகி மீதான தொடர் விசாரணையின் முதல் தீர்ப்பை அந்நாட்டு நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின்படி ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 76 வயதான அவர் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி சதிப் புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருமதி சூகி மீது ஊழல், பதிவு செய்யப்படாத வாக்கி டாக்கிகள் வைத்திருந்தது, அதிகாரப்பூர்வ இரகசியச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் சூகியின் சட்டத்தரணிகள் செய்தியாளர்களிடம் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சூ கியின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகள் போலியானவை என்றும் அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் முயற்சி இது என்றும் கூறி வருகின்றனர்.