Ads Area

அக்கரைபற்று மாநகர சபையின் பட்ஜெட் ஏகமானதாக நிறைவேற்றம்..!

 நூருல் ஹுதா உமர்

தேசிய காங்கிரஸின் ஆளுகையிலுள்ள அக்கரைப்பற்று மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் கட்சி வேறுபாடின்றி ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட பொதுச்சபை அமர்வு செவ்வாய்க்கிழமை மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆளும் தேசிய காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG) உறுப்பினர்களும் 2022 இற்கான பாதீட்டினை ஆதரவளித்து வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. 2021ம் நிதி ஆண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட  வரவு செலவுத்திட்டத்தினை கட்சி பேதமின்றி ஆதரித்து அங்கீகாரம் வழங்கியது போல், 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினையும் ஆதரித்து அவற்றில் குறித்தொதுக்கப்பட்ட காத்திரமான மக்கள் நலனோம்பும் செயற்திட்டங்களை அமுல்படுத்தவென ஆணை வழங்கியிருக்கும் சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநகர பிதா நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

வரவு- செலவுத் திட்டம் வெற்றிகரமாய் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மாநகர சபை உறுப்பினர்கள் 2022 பாதீடு குறித்து தமது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் சபையில் முன் வைத்த அதே வேளை, மாநகர முதல்வருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் விசேட அமர்வின் போது மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe