ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி சர்வதேச விமான நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் எரிபொருளை ஏற்றிச் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய் டேங்கர்கள் வெடித்து சிதறியுள்ளன.
இந் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது திங்கள்கிழமை காலை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு யேமனில் ஈரானுடன் இணைந்த ஹவுதி இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
அபுதாபியின் முசாஃபா தொழிற்பேட்டையின் எண்ணெய் நிறுவனமான ADNOC இன் சேமிப்புக் கிடங்குகளுக்கு அருகே மூன்று எரிபொருள் டேங்கர்கள் வெடித்துச் சிதறின. இதனால் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான தளத்திலும் தீ விபத்து ஏற்பட்டது.
ட்ரோன் தாக்குதல் காரணமாக விமான நிலையம் அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 3 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. உயிரிழந்த மூவரில் இரண்டு இந்தியர்கள், ஒருவர் பாகிஸ்தானியர் என்று அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் 6 பேருக்கு லேசானது முதல் மிதமானது வரை காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.