Ads Area

கல்முனை நகரில் பஸ் தரிப்புக்கு தற்காலிக மாற்று ஏற்பாடு; இன்று முதல் அமுல்.

 (அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை பஸ் நிலையத்திற்கு முன்பாக வடிகான் நிர்மாணம் மேற்கொள்ளப்படுவதால், வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, இங்கு சேவையில் ஈடுபடுகின்ற பஸ்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக வேறு இடங்களில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வீதி ஒழுங்குமுறை இன்று புதன்கிழமை (26) தொடக்கம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து பொலிஸார் உரிய இடங்களில் நின்று தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, நெறிப்படுத்தி வருகின்றனர்.

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, இலங்கை போக்குவரத்து சபை (சி.ரி.பி.) மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து பணியக அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (25) மாலை, மாநகர சபையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் இந்நடவடிக்கையை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் பஸ் நிலையத்திற்கு முன்பாகவோ மாநகர சபை தொடக்கம் பொலிஸ் நிலைய நுழைவாயில் வரையான பகுதியிலோ எந்தவொரு வாகனமும் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

இதற்கு மாற்று ஏற்பாடாக, மட்டக்களப்பு - கல்முனை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற சி.ரி.பி. பஸ்கள் யாவும் கல்முனை ரவுண்டபோர்ட் சந்தி வரை வந்து, பொலிஸ் வீதியூடாக இலங்கை வங்கி சந்தி வரை சென்று சி.ரி.பி. சாலை அமைந்துள்ள ஹிஜ்ரா வீதியோரமாக தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

அவ்வாறே, மட்டக்களப்பு - கல்முனை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பஸ்கள் யாவும் ரவுண்டபோர்ட் சந்தி வரை வந்து, பொலிஸ் வீதியூடாக பொலிஸ் நிலையம் வரை சென்று, நற்பிட்டிமுனை நோக்கி செல்லும் வீதியில் பொலிஸ் நிலைய ஓரமாக தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

கல்முனை - அக்கரைப்பற்று மற்றும் கல்முனை - அம்பாறை வீதிகளில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற சி.ரி.பி. மற்றும் தனியார் பஸ்கள் யாவும் மக்கள் வங்கிக்கு முன்பாக ஆர்.கே.எம். பாடசாலை நோக்கி செல்லும் சந்தியில் இருந்து வீதியோரமாக தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற தூர இடங்களுக்கான சேவைகளில் ஈடுபடுகின்ற பஸ்களும் மேற்படி ஒழுங்கு விதிகளின் பிரகாரம் உரிய இடங்களில் மாத்திரம் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

சேவைக்கான நேரம் வரும் வரை காத்திருப்பிலுள்ள பஸ்கள் அனைத்தும் அமானா வங்கி அமைந்துள்ள ஐக்கிய சதுக்கத்திலும் சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியிலும் தரித்து நிற்க வேண்டும். இவை எக்காரணம் கொண்டும் வீதியோரங்களில் தரித்து நிற்க முடியாது.

கல்முனை பஸ் நிலைய வளாகத்தை புனரமைத்து, அழகுபடுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற வடிகான் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் வரை இந்த ஒழுங்கு முறையை அமுல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிர்மாணப் பணிகள் நிறைவுற்று, வழமை நிலைக்குத் திரும்பும் வரை பஸ் நடத்துனர்களும் பயணிகளும் வர்த்தகர்களும் அசௌகரியங்களை சகித்துக் கொண்டு, இவ்வறிவுறுத்தல்களின் பிரகாரம் செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு வார காலத்தில் இந்த நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வேலைகளை இரவு பகலாக துரிதமாக முன்னெடுத்து முடிக்குமாறு மாநகர முதல்வர் பணிப்புரை விடுத்துள்ளார். 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe