Ads Area

தமது மக்களின் மேம்பாட்டுக்காக வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமக்கு ஒத்துழைக்க வேண்டும்!

“நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெல்வதற்கு, நாடாளுமன்றத்துக்கு உள்ளும் அதற்கு வெளியேயும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்பதை நான் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். 

“குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள், இனியேனும் அதனை நிறுத்த வேண்டும்” என்பதையும் நான் வலியுறுத்தினேன். 

இலங்கையின், 9ஆவது நாடாளுமன்றத்தின், இரண்டாவது கூட்டத்தொடரை - ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள, நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில், இன்று முற்பகல் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே இந்த விடயங்களை நான் வலியுறுத்தினேன்.

நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு நான் சென்ற போது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க ஆகியோர் என்னை வரவேற்றனர். 

சம்பிரதாயமாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்து நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டதோடு,

மரியாதை அணிவகுப்புகள், வாகன மற்றும் குதிரைப்படைத் தொடரணிகள் எவையும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 

பிரதான நுழைவாயிலுக்கு அருகில், நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவிகள் ஜயமங்கல கீதம் இசைத்து என்னை வரவேற்றனர். 

எனது சிம்மாசன உரையை இன்று நான் அங்கு ஆற்றிய போது -

“உலகப் பெருந்தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் கடினமான நேரத்தில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்துப் பணியாற்ற வேண்டிய தேசிய பொறுப்பு, அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளது.

05 வருடக் காலப்பகுதிக்குள் குறிப்பிட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ள நிலையில், உலகளாவிய தொற்றுப் பரவல் காரணமாகப் பல்வேறு இடையூறுகளை நாம் எதிர்நோக்கவேண்டி ஏற்பட்டது.”

“இருப்பினும், அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்புகளை நிறைவேற்ற நாம் மறக்கவில்லை”

“எவ்வாறான பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படினும், பொதுமக்களின் ஆரோக்கியத்தை முதன்மையாகக் கருதி, அதற்குத் தேவையான அனைத்துச் செலவுகளையும் ஏற்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது” என்பதை நான் எடுத்துரைத்தேன். 

மேலும் - “போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” 

“நாட்டுக்குள் பாரியளவில் வியாபித்திருந்த பாதாள  உலகக் கோஷ்டிகளை ஒழிக்க, கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது” என்பவற்றையும் குறிப்பிட்டேன். 

“இலங்கை எப்போதும் சர்வதேசச் சட்டங்களையும் மரபுகளையும் மதிக்கும் நாடாகும். என்னுடைய ஆட்சிக் காலத்தில், எவ்வகையிலும், மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை” என்பதையும் நான் நினைவூட்டினேன்.

“இனவாதத்தை நான் முற்றாக நிராகரிப்பதோடு, எமது நாட்டின் அனைத்துப் பிரஜைகளினதும் கௌரவம் மற்றும் உரிமைகளைச் சமமாகப் பாதுகாப்பதே எமது அரசாங்கத்தின் தேவையாகவும் உள்ளது” என்தையும்,

“எவ்விதப் பாகுபாடுமின்றி, அனைத்து மக்களுக்கும் வசதிகளை வழங்குவதே நல்லிணக்கம் மற்றும் அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகக் கருதப்படுகிறது” என்பதையும் நான் இன்று சுட்டிக்காட்டினேன். 

“உங்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு அரசியல் நோக்கங்களையும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு - உங்களது பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு  ஒத்துழைப்பு வழங்குமாறு” - வடக்கு, கிழக்கு மாகாண மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் நான் இன்று கோரிக்கை விடுத்தேன். 

“சர்வதேச முதலீடுகள் தொடர்பில் தவறான விளக்கங்களைக் கொடுத்து, பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் அரசியல் உள்நோக்கத்துடன் யாராவது செயற்பட்டால், அது இந்த நாட்டுக்கு அவர்கள் செய்யும் பாதகச் செயலாகும்.”

அதே வேளை - “நாட்டின் அபிவிருத்திக்கு, புதிய முதலீடுகளின் தேவை தற்போது அதிகமாகவே உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளுக்கான புதிய முதலீடுகளை ஈர்க்க, எதிர்காலத்தில் அதிக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்” என்பதனையும் நான் இன்று சுட்டிக்காட்டத் தவறவில்லை.

“அரச பல்கலைக்கழகங்களின் திறனை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் உயர்தர அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு இடமளிப்பது தொடர்பிலான  விவாதத்துக்கு, இந்த நாடாளுமன்றத்திற்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.”

ஏனெனில் - “இந்த நாடு, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் வாழும் மக்களுக்கே சொந்தமானது. நாங்கள் இந் நாட்டின் தற்காலப் பாதுகாவலர்கள் மட்டுமே. இன்று நாம் எவ்வாறு செயற்படுகின்றோம் என்பதிலேயே இந்த நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது” என்பதை நான் சுட்டிக்காட்டியதுடன்,

“நாம் அனைவரும், எதிர்காலச் சந்ததியினருக்குப் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மறக்கக்கூடாது” என்பதையும் நினைவூட்டுனேன்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe