( வி.ரி.சகாதேவராஜா)
தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை அரசதொழிலுக்கு நியமனம்செய்யும் வேலைத்திட்டத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தில் அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் 3க்கு சுமார் 6000 பேர் நியமிக்கப்பட்டுவருகின்றனர்.
அதன் முதற்கட்டமாக, அம்பாறை மாவட்டத்தில் 1200 பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனம் வழஙகும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் முன்னிலையில் அம்பாறை டிஎஸ். சேனநாயக்க மகாவித்தியாலயத்தில் கடந்த வியாழனன்று நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம். வீரசிங்க மற்றும் டாக்டர் திலக்ராஜபக்ஷவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கிழக்கு மாகாண் பிரதிப்பிரதம செயலாளர்(நிருவாகம்) பி.திசாநாயக்கவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாகாணசபையின் பேரவைச்செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் உள்ளிட்ட மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அம்பாறை அரச அதிபர் டக்ளஸ் ஆகியோர் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கிவைத்தனர்.
கிழக்கு மாகாணத்தில் அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் 3க்கு சுமார் 6000பேர் நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை திருகோணமலையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதற்கமைய இத்தெரிவு இடம்பெற்று கடந்த 03.01.2022 இலிருந்து செல்லுபடியாகும் வண்ணம் இந்நிரந்தர நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 23ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெற ஏற்படாகியுள்ளது.