Ads Area

கார் வாங்கச் சென்று அவமதிக்கப்பட்ட விவசாயிக்கு சரக்கு வாகனத்தை வழங்கிய தனியார் நிறுவனம்.

துமகூரு அருகே ராமனபாளையாவை சேர்ந்தவர் கெம்பேகவுடா(வயது 27). விவசாயி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு துமகூருவில் உள்ள மஹிந்திரா ஷோரூமுக்கு சரக்கு வாகனம் வாங்க சென்றார். அப்போது கெம்பேகவுடா அணிந்திருந்த ஆடை மற்றும் அவரது பேச்சை பார்த்து ஷோரூம் ஊழியர்கள் கிண்டல் செய்தனர். மேலும் அரை மணி நேரத்தில் ரூ.10 லட்சம் கொடுத்தால் சரக்கு வாகனம் தருவதாகவும் கூறி கிண்டல் செய்தார்கள்.

இதனை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்ட கெம்பேகவுடா அரை மணி நேரத்தில் தனது மாமா ராம ஆஞ்சநேயா மற்றும் நண்பர்கள் உதவியுடன் ரூ.10 லட்சத்தை கொண்டு வந்து ஷோரூம் ஊழியர்களிடம் கொடுத்தார். ஆனால் பல்வேறு காரணங்களை காட்டி சரக்கு வாகனத்தை கொடுக்க ஷோரூம் ஊழியர்கள் மறுத்தனர். இதனால் ஷோரூம் ஊழியர்கள் மீது கெம்பேகவுடா, போலீசில் புகார் அளித்தார். விவசாயியான கெம்பேகவுடா அவமதிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி தேசிய அளவிலும் எதிரொலித்தது. இந்த சம்பவத்திற்கு மஹிந்திரா கார் நிறுவனம் மன்னிப்பும் கோரி இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கெம்பேகவுடாவை ஷோரூமுக்கு வரவழைத்த ஊழியர்கள் ரூ.10 லட்சம் மதிப்பிலான சரக்கு வாகனத்தை அவரிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த வாகனத்திற்கு முன்பணமாக ரூ.1.99 லட்சம் வாங்கப்பட்டது. மேலும் ரூ.7.40 லட்சத்திற்கு மஹிந்திரா நிறுவனம் கடன் உதவியும் ஏற்பாடு செய்து கொடுத்தது. மீதம் உள்ள பணத்தை 48 தவணைகளில் செலுத்த வேண்டும் என்று கெம்பேகவுடாவிடம், ஷோரூம் ஊழியர்கள் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அந்த வாகனத்தை வாங்கி கொண்டு கெம்பேகவுடா ஊருக்கு சென்றார்.

இதுகுறித்து கெம்பேகவுடா கூறும்போது, ‘‘பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் நான் எதுவும் செய்யவில்லை. அன்றைய தினம் நான் ஷோரூமுக்கு சென்றபோது என்னிடம் ரூ.2 லட்சம் இருந்தது. ஆனால் என்னை ஷோரூம் ஊழியர்கள் அவமதித்தனர். இதனால் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தேன்’’ என்று கூறினார். கெம்பேகவுடாவுக்கு சரக்கு வாகனம் கொடுக்கப்பட்டது பற்றி மஹிந்திரா நிறுவன இயக்குனர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எங்களுடன் இணைந்து இருக்கும் கெம்பேகவுடாவை வரவேற்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe