கர்நாடகாவில் பியு கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா மாணவர்கள் காவி நிற துண்டு அணிந்து வருகிறார்கள்.
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என்று கூறி இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். கர்நாடகாவில் இருக்கும் சிவமொக்கா, உடுப்பி, மங்களூர், சிக் மங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பியு கல்லூரிகளில் இந்த மோதல் நிலவி வருகிறது.
இந்த ஹிஜாப் விவகாரத்தை இன்று கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு தொடுத்த மனு மற்றும் அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் பஸவ்ராஜ் பொம்மை அளித்த பேட்டியில், கோர்டில் வழக்கு நடக்கிறது. அதுவரை மாணவ, மாணவியர் தங்கள் யுனிபார்மில்தான் கல்லூரி செல்ல வேண்டும்.
கோர்ட் இதில் எடுக்க வேண்டிய முடிவை எடுக்கும் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித் இன்று வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கை சட்டப்படி விசாரிப்போம். இதில் உணர்வுகளை பற்றி யோசிக்க கூடாது. நமது அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்லி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நமது அரசியலமைப்பு சட்டத்தின்படி நாங்கள் வழக்கு விசாரணையை நடத்துவோம். தினமும் நடக்கும் விஷயங்களை பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது என்று, குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கர்நாடகாவில் குந்தபுரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் வகுப்பிற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்துத்துவா மாணவர்கள் இருக்கும் வகுப்புகளில் இருக்க அனுமதி அளிக்கப்படவில்லை. மாறாக தனி வகுப்புகளில் அமர வைக்கப்பட்டு உள்ளனர். அதே போல் இவர்களுக்கு வகுப்புகளும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கர்நாடகாவில் சிவமொக்காவில் உள்ள அரசு பியு கல்லூரி ஒன்றில் இந்துத்துவா மாணவர்களுக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் நடத்திய இஸ்லாமிய மாணவிகள் மீது கல் வீதி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் மாணவிகள் காயம் அடைந்த நிலையில், அங்கு இரண்டு இந்துத்துவா மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு லத்தி சார்ஜ் நடத்தி போலீசார் மாணவ, மாணவியரை அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில் குந்தபுராவில் உள்ள பியு கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினார். ஆனால் அந்த மாணவி அங்கிருந்து ஓடாமல்.. அவர்களை பார்த்து அஞ்சாமல் தனியாக நின்றார்.
அங்கு மாணவர்கள் பலர் சுற்றி நின்று கோஷம் எழுப்பினாலும்..அந்த இஸ்லாமிய மாணவி தனியாக நின்று கையை உயர்த்தி கோஷம் எழுப்பினார். எனக்கு பயம் இல்லை என்பது போல சத்தமாக இவர் கோஷம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. சக மாணவ, மாணவியர் இப்படி கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் மத ரீதியாக இப்படி மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.