பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
வீதியொழுங்கு முறைகள் உரிய முறையில் பேணப்படாமையினாலும் சீரற்றுள்ள பாதையோரங்களினாலும் பாதசாரிகள் சிரமப்படுவதுடன், அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்ற சம்பவங்கள் தினமும் பதிவாகி வருகின்றன.
இன்று அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை, கிட்டங்கிப் பகுதியை இணைக்கும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் பாரிய மரங்கள் உடைந்து விழும் நிலையில் காணப்படுவதனால், வீதியில் பயணம் செய்யும் மாணவர்கள், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் இப்பிரதேசத்தில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள விபத்துக்களை குறைத்து பெறுமதியான மனித உயிர்கள், பாதசாரிகளின் நலன்கருதி உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நற்பிட்டிமுனை, கிட்டங்கி வீதியை ஊடறுத்துச் செல்லும் பகுதியில் பாரிய மரங்கள் முறிந்து விழும் நிலையிலுள்ளமையினால் இவ்வாறு பொதுமக்கள், வாகனச்சாரதிகள் தினமும் உயிரைக் கையில் பிடித்து வீதியைக் கடக்கின்ற போது இவ்வாறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு அறிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியிலுள்ள வீதியின் இருமருங்கிலுமுள்ள வடிகான்களுக்கு மேலாக இடப்படும் கொங்கிரீட் மூடிகள் முறையாக போடப்படாமையினால் விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.
எனவே, இப்பிரதேசத்தில் அதிகரித்துள்ள விபத்துக்கள், வாகனங்கள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்குமுகமாகவும் பாதசாரிகளின் நலன்கருதியும் இந்நடவடிக்கை துரித கதியில் முன்னெடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடந்த காலங்களில் கொரோனா 3வது அலை அனர்த்த அச்சுறுத்தல் நிலையிலும் கூட வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வீதிப்போக்குவரத்திற்குத் தடையாக இருந்த பாரிய மரக்கிளைகளை வெட்டி அகற்றியிருந்தனர்.
அண்மையில் கூட மலையகப் பகுதியில் பாரிய மரமொன்றினை அகற்ற முற்பட்ட போது மரம் விழுந்து ஆசிரியயொருவர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.