தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுமியின் உயிரை காப்பதற்காக ஓடும் ரயிலுக்கு அடியில் குதித்த நபரின் துணிச்சல் மிக்க வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சக மனிதர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடினால் கூட கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் அவசர காலத்தில், தங்களது உயிரையும் பணயம் வைத்து பிறர் உயிரைக் காக்கும் சூப்பர் ஹீரோக்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
இந்தியாவில் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை மீது நடந்து செல்லும் போது, ஓடும் ரயில் இருந்து ஏற அல்லது இறங்க முயலும் போது, தண்டவாளத்தை கடக்க முயலும் போது என பல்வேறு சந்தர்பங்களில் தண்டவாளத்திற்கு இடையே தவறி விழும் சம்பவங்கள் நிறைய அரங்கேறுகின்றன. அப்படிப்பட்ட உயிருக்கு ஆபத்தான தருணங்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அல்லது சாமானிய மனிதர்களில் யாரோ ஒருவர் அந்த குறிப்பிட்ட நபரை துணிவுடன் காப்பாற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் ஆயிரக்கணக்கில் கொட்டிக்கிடக்கின்றன.
தற்போது தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுமியின் உயிரை காப்பதற்காக ஓடும் ரயிலுக்கு அடியில் குதித்த நபரின் துணிச்சல் மிக்க வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த பிப்ரவரி 5ம் தேதி அன்று மத்தியப் பிரதேச மாநிலம் போபால் பர்கேடி பகுதியில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் இருந்து திரும்பிய தச்சர் முகமது மெஹபூப் என்பவர், சில பாதசாரிகளுடன் தண்டவாளம் ஒன்றை கடப்பதற்காக காத்திருந்தார். அப்போது பெற்றோருடன் ரயில் பாதையை கடக்க முயன்ற சிறுமி, தண்டவாளத்தில் தவறி விழுவதை கண்டார். அந்த சமயம் பார்த்து சரக்கு ரயில் ஒன்றும் சிறுமி விழுந்துள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். திகைத்து நின்ற பார்வையாளர்களுக்கு மத்தியில், துணிச்சலாக முடிவெடுத்த முகமது மெஹபூப், தனது உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தண்டாவளத்திற்குள் டைவ் செய்தார், ஊர்ந்த படியே சென்று சிறுமியை தண்டவாளத்திற்கு நடுவில் இழுத்துப்போட்டார்.
தண்டவாளத்தில் இருந்து எழுந்திருக்க முடியாமல் தவித்த சிறுமியின் தலையை நன்றாக அழுத்தி பிடித்துக் கொண்டார். ஏனென்றால் அந்த நேரம் ரயில் அவர்கள் இருவரையும் கடந்து சென்று கொண்டிருந்தது, அப்போது பயத்திலோ, பதற்றத்திலோ சிறுமி தலையை தூக்கினால் பெரும் அசம்பாவிதம் நேர்ந்திருக்கும். எனவே தான் சிறுமியின் உயிரை காப்பதற்காக முகமது மெஹபூப் அவ்வாறு செய்தார். இந்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்தவர்களால் பதிவு செய்யப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்க்கும் பலரும், தன் உயிரைப் பற்றி கவலைப்பட்டாமல் சிறுமியை காப்பாற்றிய 37 வயதே ஆன முகமது மெஹபூவை பாராட்டி வருகின்றனர்.
வீடியோ https://twitter.com