மாளிகைக்காடு நிருபர்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசனலிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஹசனலியின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று (27) மாலை நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் ஆகியோர் கூட்டமைப்பு சார்பாக இதில் பங்கெடுத்தனர்.
மாலை 5 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ் - முஸ்லிம் உறவைப் பலப்படுத்துவது, இரு இனங்களுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்கு இணக்கத் தீர்வு எட்டுவது ஆகியன தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு தரப்பினரும் விரைவில் மீண்டும் சந்தித்துப் பேசுவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.