டெல்லியில் இரண்டு மாத குழந்தையை மைக்ரோ ஓவனில் வைத்து கொன்றது தொடர்பாக குழந்தையின் தாயாரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் சிராக் தில்லி என்ற இடத்தில் வசிப்பவர் குல்ஷன் கவுசிக். இவர் மகள் டிம்பிள் கவுசிக். டிம்பிள் வீட்டிலிருந்த போது தன் மகன், இரண்டு மாத பெண் குழந்தையுடன் வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். இதனால் டிம்பிள் மாமியார் கதவைத் தட்டிப்பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்களை உஷார் படுத்தினார். கதவு பூட்டப்பட்டு இருப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கதவைத் திறந்து பார்த்த போது டிம்பிளும், அவரின் நான்கு வயது மகனும் மயங்கிக்கிடந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் டிம்பிளின் இரண்டு மாத பெண் குழந்தையைக் காணவில்லை என்பதால், வீடு முழுக்க தேடிப்பார்த்தனர். ஆனால், கிடைக்கவில்லை.
அதையடுத்து, டிம்பிள் மாமியார் வீடு முழுக்க தேடிப்பார்த்ததில் இரண்டாவது மாடியிலிருந்த மைக்ரோ ஓவனுக்குள் குழந்தை இறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கண்டு பதறிப்போன டிம்பிளின் மாமியார், டிம்பிள் குழந்தையைக் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸாரிடம் சந்தேகம் தெரிவித்தார். அதையடுத்து, போலீஸார் குழந்தையின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து டிம்பிளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி பெனிதா மேரி கூறுகையில், ``பெண் குழந்தை பிறந்ததில் டிம்பிள் மிகவும் அதிருப்தியிலிருந்திருக்கிறார். இது தொடர்பாக டிம்பிள் தன் கணவருடனும் சண்டை போட்டுள்ளார். குழந்தையின் மரணம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இது குறித்து அனைத்து கோணத்திலும் விசாரித்து வருகிறோம். குழந்தையின் தாய் மீது சந்தேகம் இருக்கிறது" என்று தெரிவித்தார்.
நன்றி - vikatan .