இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என்ற காலம் மலையேறி விட்டது இன்றைய சிறார்கள்தான் இன்றைய தலைவர்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என சமூக சேவகரும், விஞ்ஞான முதுமாணியுமான அஸ்மி யாசீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவடிப்பள்ளி றோயல் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, மாவடிப்பள்ளி அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் இடம் பெற்றது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் உரையாற்றிய அஸ்மி யாசீன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய சிறார்கள்தான் இன்றைய தலைவர்களாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அதன்பால் அவர்களை வழிநடாத்தி இந்த சமூகத்தின் தலைவர்களாக அவர்களை மாற்ற வேண்டியது நம் எல்லோரது தலையாய கடமையாகும். இனி வரும் காலம் மிகவும் சவால் மிக்க காலமாக அமையும் அந்த சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவதற்கு நமது சிறார்களை நாம் தயார்படுத்த வேண்டும் அதற்கு பெற்றோர்களது ஒத்துழைப்பும், வழிகாட்டுதல்களும் மிக அவசியமாகும்.
நமது பிள்ளைகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய மிகப் பெரிய சொத்து அவர்களுக்கு நாம் கொடுக்கும் கல்வியே அன்றி வேறில்லை. இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என்ற காலம் மலையேறிவிட்டது இன்றைய சிறார்கள்தான் இன்றைய தலைவர்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அதனால் சிறார்களை நாம் தலைமைத்துவத்தை நோக்கி இப்போதே வழிநடாத்த வேண்டியுள்ளது.
அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் இடம் பெறும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் என்னையும் அழைத்தமைக்கு பாடசாலை நிர்வாகத்தினருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் விளையாட்டுத் திறமையினை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் றோயல் முன்பள்ளி பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.