Ads Area

மாகாண காரியாலயத்தை இடமாற்ற மீண்டும் முஸ்தீபு : பொய்யான கதையாடல்கள் களையப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை !

 (நூருல் ஹுதா உமர், பாறூக் ஷிஹான்)

இளைஞர் அபிவிருத்தி பணிகளில் இன மற்றும் பிரதேச வாதங்கள் எதுவுமின்றி நேர்மையான முறையில் தேசிய நலன்களைக் கவனத்திற் கொண்டு செயற்பட்டுவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் சாய்ந்தமருதிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கிவருகிறது. அதனை அம்பாறை நகரத்திற்கு கொண்டு செல்ல வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்தி அவ்விடத்திலையே தொடர்ந்தும் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இவ்விடயத்தில் அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகள் அடங்களாக கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் தலையிட்டு தீர்வை பெற்றுத்தரவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து முன்னோடி இளைஞர் தலைவர்கள்  ஊடக சந்திப்பொன்றை நடத்தினர்.

இளைஞர் பாராளுமன்ற கப்பல் துறைமுகங்கள் பிரதியமைச்சர் எஸ்.எம். றிஹான், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட பிரதிநிதி சிப்னால் அஷீஸ், இளைஞர் கழகங்களின் சம்மேளன அம்பாறை கிளையின் பிரதித்தலைவர் எம்.எம். ருக்ஸான், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நிஸ்கோ மாவட்ட கிளையின் பணிப்பாளர்சபை உறுப்பினர் ஹிஸாம் ஏ பாவா, சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளன தலைவர் எம். சிப்னாஸ், கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதிநிதி இஸட். சக்கி ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (22) இரவு சாய்ந்தமருது சீ பிரிஸ் இல் நடைபெற்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் எவ்வித தடைகளுமின்றி முறையாக இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் சிலர் ஈடுபட்டு வருவதையிட்டு  மிகுந்த மன வேதனை அடைகின்றோம். ஓரிரு உத்தியோகத்தர்களின் சுயநல தேவைகளுக்காக இளைஞர்களின் அபிலாஷைகளை விட்டுக்கொடுக்க முடியாது. போக்குவரத்தை காரணம் காட்டி இப்போது இருக்கும் காரியாலயம் பிரதான வீதியிலிருந்து தூரம் கூடுதலாக இருப்பதாக கூறும் அவர்கள். இதனை இப்போது மாற்ற எடுக்கும் இடம் பிரதான வீதியிலிருந்து இப்போது இருக்கும் காரியாலயத்தின் தூரத்தை விட மிக அதிக தூரமாக அமைந்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஓரிரு சுயநல சிந்தனை கொண்ட உத்தியோகத்தர்களுக்காக எவ்வித குறைபாடுகளும் இல்லாமல் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தமிழ் பேசும் இளைஞர்கள் பயன்பெறும் குறித்த அலுவலகம் ஏன் மாற்றப்பட வேண்டும் ? நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வு பற்றியும் இளைஞர்களின் அபிவிருத்தி பற்றியும் மக்களும் அரசாங்கமும் கருத்து கூறிவரும் இச் சூழ்நிலையில் அதனைச் சிதைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே  சாய்ந்தமருதில் இயங்கிவரும் கிழக்கு மாகாண அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் அதே இடத்தில் மேற்கொள்ளும் வகையில் அதற்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் ஜனாதிபதி, பிரதமர், இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தவிசாளர் ஆகியோருக்கு ஏற்கனவே எழுத்து மூல மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் தலையிட்டு இவ்வநீதிக்கு எதிராக நீதியை பெற்றுத்தரவேண்டும் என்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe