Ads Area

காலநிலை மாற்றத்தின் காரணமாக கிழக்கிற்கு படையெடுக்கும் வெளிநாட்டுப்பறவை இனங்கள்.

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டுப்பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை, பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, மத்தியமுகாம், சவளக்கடை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள நீர்  நிலைகளை நாடி வெளிநாட்டுப்பறவை இனங்கள்  வருகை தருகின்றன.

குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக அப்பகுதிகளுக்கு பலரும் வருவதோடு, அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வங்காட்டி வருகின்றனர்.

இம்மாதக்கடைசியில் அம்பாறை மாவட்டத்தில் பல நாட்டுப்பறவைகளும் வந்து தங்குகின்றன. இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டுப் பறவைகள் ஜனவரி, பெப்ரவரி மாதம் கூடு கட்டத்துவங்கும். 

மேற்குறித்த பறவைகள் 2000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், நைஜரியா, சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கடல் காகம், கடல் ஆலா, பாம்புத்தாரா, சாம்பல் நாரை, வெட்டிவாயன், கரன்டிவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன் நாரை இனங்கள், அன்னப்பறவை உள்ளிட்ட கொக்கு இனங்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பகுதிக்கு வரும் விதவிதமான பறவைகள் இங்கேயே கூடுகட்டி தங்கி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, குஞ்சுகளுக்கு பறக்கக் கற்றுக்கொடுத்து, மார்ச் மாத இறுதியில் புதிய குடும்பமாய் சொந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதும் வழமையாகி விட்டது.

மேலும், இப்பறவைகள் யாவும் இயற்கைச்சூழலைப்  பாதுகாப்பதிலும் வேளாண்மைச் செய்கைக்கு விவசாயிகளுக்கு உதவுவனவாகவும் செயற்படுகின்றன.

சில இடங்களில் சட்டவிரோதமாக இப்பறவைகள் வேட்டையாடப்பட்டு, கூடிய விலைகளில் விற்பனையாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe