Ads Area

புனரமைக்கப்பட்ட கல்முனை பஸ் நிலைய வளாகம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு..!

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் புனரமைப்பு செய்யப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ள கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலைய வளாகம் மக்கள் பாவனைக்காக கல்முனை மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆவணங்களை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.பி.எஸ்.ஜெயதிஸ்ஸ இன்று கையளித்தார். 

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், கணக்காளர் கே.எம்.றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் எம்.உதயகுமரன், உள்ளுராட்சி உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.நெளஷாத், நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட அமுலாக்கல் உத்தியோகத்தர் ஜீ.கே.சி.கருணாரத்ன, நகர திட்டமிடல் உத்தியோகத்தர்களான எம்.எம்.முஸ்தாக், வி.துஷித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பொறுப்பிலுள்ள நகர அபிவிருத்தி அமைச்சினால் தேசிய ரீதியில் 100 நகரங்களை செழுமைமிகு நகரங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் விடுத்த வேண்டுகோளின் பேரில், பிரதமரின் விசேட பணிப்புரைக்கமைவாக கல்முனையும் இத்திட்டத்தில் உள்வாங்கபட்டது.

இதைத் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர், பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் எச்.எம்.எம்.ஹரிஸ் எம்.பி. மற்றும் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் ஆகியோர் மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம் முதற்கட்டமாக பஸ் நிலைய வளாகத்தை புனரமைத்து, அழகுபடுத்துவதற்காக சுமார் 18.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களின் வழிகாட்டலில் கடந்த செப்டெம்பர் மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளரின் பங்குபற்றுதலுடன் மாநகர முதல்வர் தலைமையில் இவ்வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இவ்வேலைத் திட்டம் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து பஸ் நிலைய வளாகம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக பள்ளம் படுகுழிகளுடன் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்ட கல்முனை பஸ் நிலைய வளாக புனரமைப்பு வேலைத்திட்டத்தை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் மஹிந்த, பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர், பிரதிப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.

-முதல்வர் ஊடகப் பிரிவு



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe