Ads Area

எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் தரம் 1 மாணவர்களின் வித்தியாரம்ப விழா நடைபெறவுள்ளது.

 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் தரம் 1 மாணவர்களின் வித்தியாரம்ப விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் இம்முறை புதிதாக அனுமதி பெற்றுள்ள தரம் 1 மாணவர்களின் பெற்றோர்  வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸார் தெரிவித்தார்.

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலையில் இடம்பெறவுள்ள வித்தியாரம்ப விழா பற்றி புதிதாக அனுமதி பெற்றுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு நேற்று (26) செவ்வாய்க்கிழமை விளக்கமளித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு அதிபர் தெரிவித்தார். 

அங்கு மேலும் பேசும் போது, 

இம்முறை கிட்டத்தட்ட எமது பாடசாலையில் தரம் 1 க்கு புதிதாக 250 மாணவர்கள் அனுமதி பெற்றுள்ளார்கள். எனவே, அனுமதி பெற்றுள்ள மாணவர்களின் பெற்றோர்களாகிய நீங்கள் விழாவுக்கு வருகை தந்து பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து பெற்றோர்களில் ஆண்கள் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் விகிதம் எமது பகுதியில் மிகக் குறைவாக காணப்படுகின்றனர். நீங்கள் ஏனைய பகுதிகளில் சென்று பார்த்தால்  தெரியும் அங்கு பெற்றோர் சம்பந்தப்பட்ட கூட்டங்களில் மிக அதிகமாக ஆண்களே கலந்து கொண்டிருப்பார்கள். எனவே, எதிர்வரும் காலங்களில் கூடியவரை ஆண்களே கூட்டங்களில் கலந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். 

நாட்டின் ஏனைய இடங்களில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் நிறைய தனவந்தர்கள் பௌதீக வள, மனித வள ரீதியாக உதவி ஒத்தாசைகள் செய்கிறார்கள். எமது பகுதியில் உள்ள விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் பாடசாலைக்கு உதவி ஒத்தாசைகள் செய்ய தானாக முன்வருவதில்லை. 

இது உங்கள் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலை. இதற்கு உங்களால் முடியுமான பங்களிப்பை தானாக முன்வந்து  செய்வதற்கு தயங்கக் கூடாது. எமது பகுதியில் நிறைய தனவந்தர்கள் உள்ளனர். ஆனாலும் தர்மம் செய்வதில் மிகக் குறைவாக இருக்கின்றனர். 

எமது பாடசாலையில் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் போட்டோப் பிரதி எடுப்பதற்குக் கூட வசதி குறைவாகக் காணப்படுகிறது. எனவே, இதனை எமது பகுதி தனவந்தர்கள் அறிந்து செயற்பட்டு, பாடசாலைக்கு நிறைய தேவைப்பாடு உள்ளதால் முடியுமான பெற்றோர்கள் பணம் அல்லாமல் பொருள் ரீதியாக, பௌதீக வள மற்றும் மனித வள ரீதியாக தங்களது பங்களிப்பை வழங்க முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அங்கு பேசிய உதவி அதிபர் எம்.எச். நுஷ்ரத் பேகம்,  

பாடசாலை எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும், அன்றைய தினம் தரம் 1 மாணவர்கள் காலை 10 மணிக்கே வீடு செல்லலாம். 4 மற்றும் 5 ஆம் திகதிகளில், பாடப்புத்தகங்கள் கொண்டு வரத்தேவை இல்லை என்றும் 5 ஆம் திகதி வித்தியாரம்ப விழா முடிவுற்றதும் மாணவர்கள் வீடு செல்லலாம் என்றும் தெரிவித்தார்.

வித்தியாரம்ப விழாவான 5 ஆம் திகதி பாடசாலை வரும்போது சீருடையுடன்தான் வரவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள் செய்ய வேண்டும்.

பாடசாலை சீருடையாக ஆண்  மாணவர்களுக்கு நீல நிற காற்சட்டை வெள்ளை நிற சேர்ட். கருப்பு நிற சொக்ஸ் மற்றும் கருப்பு நிற சப்பாத்து. பெண் மாணவிகளுக்கு நீல நிற கவுன். வெள்ளை நிற சட்டை, கருப்பு நிற சப்பாத்து, வெள்ளை நிற சொக்ஸ். அடுத்து. டை கிடைக்காத மாணவர்கள்  4 ஆம் திகதி பாடசாலை வரும் போது  உங்களது வகுப்பாசிரியரைத் தொடர்பு கொண்டு கேட்டு பெற்றுக் கொள்ளவும். 

தரம் 1 க்கான பாடசாலை நேரம் காலை 7.30க்கு ஆரம்பித்து நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும். 

அடுத்து தரம் 1 மற்றும் 2 மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் விளையாட்டு விநோத செயற்பாடுகளின் மூலம்தான் இடம்பெறும். பாடப்புத்தகங்களில் பாடங்கள் இடம்பெறுவது குறைவாகவே இருக்கும். விளையாட்டின் மூலமாகவே அதிக பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படும். எனவே, அதற்கு பெற்றோர்களாகிய உங்களது பங்களிப்பையும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe