Ads Area

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் எரிபொருள் வேண்டி இன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று காலை சம்மாந்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு பெற்றோல் பெற்றுக் கொள்வதற்கு சென்ற போது தங்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை. நேற்று (18) அத்தியாவசிய சேவைக்கு என்று அறிவிக்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொள்வதற்கு சென்ற போததே தங்களுக்கு மறுக்கப்பட்டது என்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் எரிபொருள் வேண்டி இன்று(19)சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வைத்தியசாலையில் எந்தவொரு சிகிச்சையும் நடைபெறவில்லை. இதனால் வைத்திய சேவைக்கு வந்த பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டனர்.

எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு மூன்று டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இது வரை அந்த டோக்கன்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என்று வைத்தியசாலையின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆதலால் தங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் பிரதான வீதியை மறித்து ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வீதி  மறியல் போராட்டத்தில் இன்று (19) ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணிமுதல் இந்த போராட்டம் நடைபெற்றது.

தங்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டால் மட்டுமே போராட்டத்தினை கைவிடுவோம் என்று வைத்தியசாலையின் ஊழியர்கள் தெரிவித்தனர். ஆயினும் இவர்களின் கோரிக்கை தொடர்பில் பேசுவதற்கு எந்தவொரு அதிகாரியும் வராத நிலையில் இன்று  பிற்பகல் ஒரு மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர். பொது மக்களுக்காக தமது போராட்டத்தை கைவிட்டுள்ளோம். எமது கோரிக்கை நிறைவேறும் வரை உயிர் காக்கும் அத்தியாவசிய வைத்திய சேவையில் மாத்திரம் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் வைத்தியர்களும் பங்கு கொண்டனர்.

மேலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் அதாவது சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டதன் பின்னர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், சம்மாந்துறை பிரதேச செயலாளர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் வைத்தியசாலையின் ஊழியர்களுடன் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். இதற்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை.

இந்த உயர் அதிகாரிகள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றவுடன் வருகை தந்திருந்தால் வைத்திய சேவைக்கு வந்த பொதுமக்களுக்கு வைத்திய சேவை வழங்கி இருக்க முடியும். இவர்களின் வருகையில் ஏற்பட்ட காலதாமதம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வைத்திய சேவை தடைப்பட்டமை விசனத்துக்குரியது என்று பொது மக்கள் பலரும் தெரிவித்தார்கள். பொது மக்களின் நலன்களில்  அதிகாரிகள் அக்கறை கொள்ளும் போது மாத்திரமே நாடு முன்னேறும். வெறுமனே அரசியல்வாதிகளை மாத்திரம் குறை கூறிக்கொண்டு இருக்கும் மனநிலையும் மாற வேண்டும். அதிகாரிகள் தமது கடமையை சரியாக செய்யும் போது அரசியல்வாதிகளும் மாற வேண்டிய நிலை ஏற்படும்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe