முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நிபந்தனையுடனான ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், அவருக்கு 7 வருடங்களுக்கு இலங்கையின் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம், அரசியலமைப்பின் 34 (1) (d) பிரிவின் கீழ் பகுதியளவிலான பொதுமன்னிப்பிலேயே ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 34 (2) இன் கீழ் ஜனாதிபதியின் முழுமையான பொதுமன்னிப்பு கிடைக்கும் பட்சத்திலேயே அவருக்கு குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் கவலை வெளியிட்டுள்ளார்.
இதன் காரணமாக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அரசியல் ரீதியான எந்தவொரு பதவியையும் அனுபவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளை உள்ளடக்கிய முழுமையான ஜனாதிபதி மன்னிப்பை வழங்குமாறு, சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைச் சட்டத்திற்கமைய, 2 வருடங்களுக்கு மேல் சிறையில் இருக்கும் நபர் ஒருவர், 7 வருடங்களுக்கு அரசியல் மற்றும் குடியுரிமை ஆகிய உரிமைகளை இழக்கின்றார்.
ஜனாதிபதியின் முழுமையான பொது மன்னிப்பு கிடைக்கும் வரை அவருக்கு இத்தடை அமுலில் இருக்கும்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த வேளையில், சிறை சென்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு முழுமையான பொது மன்னிப்பை வழங்கியிருந்தார்.
அத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக சிறை சென்ற கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முழுமையான ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியிருந்தார்.