Ads Area

உப்பு சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும்.

 


நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் உள்ள ஆறு சுவைகளில் நம்மை அறியாமலேயே உப்பை அதிகம் பயன்படுத்தி வருகிறோம். இதனால் நமது உடலுக்குத் தேவையான உப்புச் சத்தின் அளவைவிட அதிகளவு உப்பு நமது உடலில் தங்குகிறது. அதிக உப்பு, சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும்.

சீனி உடல் நலத்துக்குக் கேடு என்று தவிர்க்கும் பலரும் உப்பினால் ஏற்படும் ஆபத்தை உணர்வதில்லை. உப்பை எவ்வளவு அதிகம் எடுத்துக் கொள்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் மரணம் நம்மை நெருங்கிவிடும் என்கிறது சமீபத்திய ஆய்வு. உணவில் கூடுதலாகத் தூவும் உப்பு, மரணத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

உணவில் உப்பு சேர்ப்பது உடலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிய 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்திய ஆய்வு பற்றிய ஒரு கட்டுரையை ஐரோப்பிய ஹார்ட் ஜேர்னல் வெளியிட்டது.

அந்த ஆய்வில் உப்பை எந்த அளவு அதிகம் உணவில் சேர்க்கிறோமோ, அந்த அளவு மரணம் நம்மை நெருங்குகிறது. அதிக உப்பு மனிதனின் ஆயுளைக் குறைக்கும், உணவில் கூடுதல் உப்பை சேர்ப்பவர்கள் உடல்நிலை பாதிப்பால் முன்கூட்டியே இறக்கின்றனர்.

எனவே, நீண்டகாலம் வாழ வேண்டும் என விரும்புபவர்கள் உணவில் உப்பை குறைப்பது மிகவும் நல்லது. உப்பு அதிகமானால், இரத்த அழுத்தம் அதிகமாகிறது. அதனால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு ஏற்படலாம்.

உப்பு அதிகரிக்கும் பட்சத்தில் வயிற்றுப்புண், இதயச் சுவரில் வீக்கம், சிறுநீரக கோளாறு, சிறுநீரகக்கல் பாதிப்புகள் ஏற்படும். இரத்தத்திலும் உப்புச்சத்து அதிகரிக்கும். எலும்பின் அடர்த்தியும் குறையும். சில நோய்கள் தாக்கும்போது உப்புச்சத்து அதிகரிப்பால் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புண்டு.

அதிக உப்பு, இரத்த நாளத்தின் உட்புறம் கொழுப்பாக படிகிறது. உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக நாம் உணவுக்காக எடுக்கும் உப்பின் அளவை பாதியாக குறைத்தால் இரத்த அழுத்தமும் குறையும்.

உப்பில் இருக்கும் இரசாயன சத்துகள் நமது உடலில் நீர்ச்சத்து, இரத்தத்தின் அளவு குறையாமல் பாதுகாக்கிறது. இதயம் சீராக செயல்பட மிகவும் உதவுகின்றன. என்றாலும் உப்பின் அளவு அதிகரிக்கும்போது இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. உடலில் உப்பு கூடும்போது கல்சியம் இயல்பாகவே குறையும்.

உப்பை குறைவாக சாப்பிடும் நபர்களோடு, உப்பை அதிகம் சாப்பிடும் நபர்களை ஒப்பிட்டு நடத்திய ஆய்வில், உப்பை குறைத்துப் பயன்படுத்தியவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாததும் உப்பை அதிகம் பயன்படுத்தியவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டதும் முன்கூட்டியே இறப்பதும் தெரிய வந்திருக்கிறது. உணவில் உப்பின் அளவைக் குறைப்பது இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

எனவே, சாப்பிடும்போது உப்பை அளவோடு சேர்ப்பதே உடல் நலத்துக்குச் சிறந்தது. உப்பு அதிகமுள்ள உணவுகளை தொடாதீர்கள். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்புச்சத்து அதிகமிருக்கும் என்பதால் அவற்றை தவிருங்கள். உப்பைக் குறைத்து உங்கள் வாழ்நாளில் அதிக வருடங்களை கூட்டிக் கொள்ளுங்கள்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe