மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனைச் சாவடியில் வைத்து சுமார் 11 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளை இன்று (31) காலை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதோடு, இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த ஐஸ் ரக போதைப்பொருள் இன்று காலை சுமார் 6.50 மணி அளவில் மீட்கப்பட்டுள்ளது.
கூலர் ரக வாகனத்தின் முன் இருக்கையில் சூட்சுமமான முறையில் பதுக்கி வைத்து கொண்டு செல்லப்பட்ட 10 பொதிகளை கொண்ட 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் பெரிய கடை மற்றும் தலைமன்னார் கிராமம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் எனவும், தற்போது குறித்த சந்தேக நபர்களும், மீட்கப்பட்ட ஐஸ் போதைப் பொருட்களும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.