Ads Area

தேசிய பண்டிகைகளை பல்கலைக்கழகங்களில் கொண்டாடுவது தேசிய நல்லிணக்கத்திற்கு வழிகோளும் : உபவேந்தர் றமீஸ் அபூபக்கர்.


 நூருல் ஹுதா உமர்

தேசிய ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் சமூக, கலாசார நடவடிக்கைகள், ஆராய்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத் துறைகளில் அறிவைப் பரப்புவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை வழங்குவதில் பல்கலைக்கழக சமூகத்தை சிறந்து விளங்கச் செய்தல் வேண்டும். தேசிய சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர்களை உருவாக்கும் மையமாக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டுமென தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
சமூக நல்லிணக்க மையத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கல்வி சமூகத்துடன் உரையாடல்" எனும் நிகழ்வு மையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பைறோஸ் தலைமையில் கலை, கலாச்சார பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சமூக நல்லிணக்க மையத்தின் பதாதையினை திறந்து வைத்தார்.
இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், எமது பல்கலைக்கழகத்தின் சமூக நல்லிணக்கக் கொள்கையானது RUCSH ஐ நிறுவுதல், திறனை மேம்படுத்துதல், ஆராய்ச்சி வெளியீடு மற்றும் பிற நடவடிக்கைகளில் பல்கலைக் கழகத்திற்கு வழிகாட்டும் ஒரு கட்டமைப்பை உருவாக்குவதாகும். தைப்பொங்கல், தமிழ், சிங்கள புத்தாண்டு, வெசாக், ரமழான் இப்தார், தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற தேசிய பண்டிகைகளை பல்கலைக் கழகங்களில் கொண்டாடுவது தேசிய நல்லிணக்கத்திற்கு வழிகோளும் நிகழ்வுகளாகும்.
நல்லிணக்கத்தை மையப்படுத்தி ஓவியம், கலை, கலாச்சார கண்காட்சிகள் போன்றவற்றை நடத்துதல்,மோதல், அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளை நடத்துதல் வேண்டும். இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் ஆசிரிய மட்டத்தில் மாணவர்களின் ஈடுபாட்டுடன் நடத்தப்படும் சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதான ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை வெளியிட மும்மொழி இதழை உருவாக்குதல் மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கும் நடனம், நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கலாச்சார விழாக்கள், வேடிக்கை நடவடிக்கைகள், இளைஞர் முகாம்கள், பல்கலைக்கழகம் மற்றும் தேசிய அளவில் பல கலாச்சார நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை செயல்படுத்த வாய்ப்புகளை வழங்குதல், இது இளைஞர்கள் மற்ற கலாச்சாரங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உதவுமென்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில், துறைத்தலைவர் பேராசிரியர் எம்.பெளஸர், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உயர் அதிகாரிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக, "கலைச் செயற்பாட்டில் பண்பாட்டு பன்மைத்துவம்" என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக, சிரேஷ்ட விரிவுரையாளர், எஸ். சந்திரகுமார் சிறப்புரையாற்றினார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe