பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான மீன்களின் பிடிபாடு அதிகரித்த போதிலும், மீன்களின் விலை அதிகரித்துக் காணப்படுகின்றது.
குறித்த மாவட்டத்தில் காரைதீவு, நிந்தவூர் பிரதேச சபை மற்றும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக அதிகளவு மீன்கள் பிடிக்கப்பட்டதையடுத்து விலைகள் அதிகரித்துள்ளது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி தற்போது தொடர்வதன் காரணமாக மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இவ்வாறு விலை அதிகரிப்பை மேற்கொண்டள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால் சூரை ஒரு கிலோ 1,800 ரூபாய் முதல் 2,550 வரை விற்பனை செய்யப்பட்டதுடன், முரல் ஒரு கிலோ 800 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, ஒரு கிலோ விளை மீன் 1,000, பாரை மீன் ஒரு கிலோ 2,500, இறால் ஒரு கிலோ 1,700, கணவாய் ஒரு கிலோ 1,600, சூடை மீன் ஒரு கிலோ 800, சுறா மீன் ஒரு கிலோ 3,000, வளையா மீன் 2600, திருக்கை மீன் ஒரு கிலோ 2,600 ரூபாயாகவும் தற்போது மீனவர்கள் மற்றும் வியாபாரிகளினால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகள் மீன் சந்தைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு இருந்த போதிலும், கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குபட்ட மருதமுனை, கல்முனை, பாண்டிருப்பு , சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை பகுதிகளில் அதிகளவான விலை ஏற்றங்கள் தான்தோன்றித்தனமாக சில மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனைக் கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார சபை நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இருந்த போதிலும், சில மீனவர்கள் மீன்களின் விலையேற்றங்கள் காலத்திற்கேற்ப மாறுபடும் என்பது தவிர்க்க முடியாத்தெனத் தெரிவித்தனர்.
மேலும், இப்பகுதியில் மாரி கால பருவ மழையின்மையினால் அங்குள்ள ஆறு, குளம் ஆகியவற்றில் அதிகளவான மீனினங்கள் பிடிக்கப்பட்டு தற்போது விற்பனை செய்யப்படுகின்றன.
அத்துடன், கருவாடு வகைகளின் விலையும் இப்பகுதியில் அதிகரித்து வருகிறது.