அமீரகத்தில் நீங்கள் சமீபத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஒரு நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தாலோ, உங்கள் விசாவும் ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் இருக்கலாம். அவ்வாறு உங்கள் பணி அனுமதியை (work permit) ரத்து செய்வது, உங்கள் ரெசிடென்ஸ் விசாவை எவ்வாறு பாதிக்கலாம் அல்லது பாதிக்காமல் போகலாம் என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும் கீழே இடம்பெற்றுள்ளன.
பணி அனுமதிக்கும் வேலை விசாவிற்கும் என்ன வித்தியாசம்?
முதலாவதாக, பணி அனுமதி (work permit) மற்றும் வேலைவாய்ப்பு விசா (employment visa) இரண்டும் வெவ்வேறு என்பதை புரிந்து கொள்வது முக்கியம் ஆகும். துபாயைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் கூற்றுப்படி, பணி அனுமதி ஒரு நபரை தனிப்பட்ட ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய உதவுகிறது. அதே நேரத்தில் ரெசிடென்ஸ் விசாவானது தனிநபரை ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்க அனுமதிக்கிறது என தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “வேலைவாய்ப்பு விசாவிற்கும் பணி அனுமதிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், வெவ்வேறு அரசாங்க அதிகாரிகள் அவற்றை வழங்குகிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குறிப்பிட்ட எமிரேட்டின் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தால் (GDRFA) விசா வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் நிறுவனங்களுக்கான பணி அனுமதி மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தால் (MoHRE) மற்றும் ஒரு வேளை ஃப்ரீ ஸோன் நிறுவனங்களாக இருப்பின் குறிப்பிட்ட ஃப்ரீ ஸோன் அதிகாரிகளாலும் வழங்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
இதனடிப்படையில் பணி அனுமதி மற்றும் வேலை விசா குறித்த வேறுபாடுகள்
பணி அனுமதி: MOHRE ஆல் வழங்கப்பட்ட 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்டம் 33 இன் படி, உரிமம் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிய ஒரு நபரை பணி அனுமதி அனுமதிக்கிறது. இதன் கீழ் MOHRE அமீரக நிலப்பரப்பில் இருக்கும் நிறுவனங்களுக்கு வேலை அனுமதிகளை வழங்குகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே போல் ஃப்ரீ ஸோன் அதிகாரிகளால் ஃப்ரீ ஸோனில் செயல்படும் நிறுவனங்களுக்கு பணி அனுமதி வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு விசா: வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் வசிப்பிடத்திற்கான கூட்டாட்சி ஆணை-சட்டத்தின் கீழ் GDRFA ஆல் வேலைவாய்ப்பு விசா வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு வெளிநாட்டவர் சட்டப்பூர்வமாக வேலை செய்ய, அவர்கள் அமீரக நாட்டவர் அல்லது அமீரகத்தில் உள்ள சட்டப்பூர்வ நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு விசாவைப் பெற வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் துறை நிறுவனத்தால் MoHRE விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு விசாவானது இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
வேலையை விட்டு நீங்கினால் விசா பாதிக்கப்படுமா?
இரண்டு வெவ்வேறு அதிகாரிகள் பணி அனுமதி மற்றும் அமீரக விசாவை வழங்கினாலும், தொழிலாளியின் ரெசிடென்ஸ் விசாவிற்கு தொழிலாளி வேலை பார்த்த முதலாளி அல்லது நிறுவனம் விண்ணப்பித்த சூழ்நிலைகளில் இந்த செயல்முறை எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதை வழக்கறிஞர் விளக்கியுள்ளார்.
அதன்படி தொழிலாளி வேலை பார்த்த நிறுவனத்தின் மூலம் ஸ்பான்சர் செய்யப்பட்ட விசாவில் இல்லாத தொழிலாளர்களுக்கு பணி அனுமதி ரத்து செய்யப்படுவதால் விசாவில் எந்த பாதிப்பும் இருக்காது. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது மனைவியால் ஸ்பான்சர் செய்யப்பட்ட தனிநபர்கள் போன்ற பிரிவுகள் இதில் அடங்கும்.
நான் எனது நிறுவனத்தின் விசாவில் இருந்தால் என்ன நடக்கும்?
முதலாளி அல்லது நிறுவனம் ஸ்பான்சர் செய்யப்பட்ட விசாவில் உள்ளவர்களுக்கு, பணி அனுமதி மற்றும் விசாவை ரத்து செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் உள்ளது. எனினும் இரண்டு செயல்முறைகளும் தனித்தனியாக மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில் வேலையில் இருந்து நீக்கப்பட்டு பணி அனுமதி ரத்து செய்யப்பட்டவுடன் விசா தானாகவே ரத்து செய்யப்படாது. அதற்கு பதிலாக தொழிலாளருக்கு ஒரு மாத அவகாசம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு மாத கால அவகாசத்தின் போது, நீங்கள் நாட்டில் தங்க விரும்பினால், உங்கள் ரெசிடென்ஸ் நிலையை முறைப்படுத்தி மற்றொரு விசாவிற்கு விண்ணப்பிக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. உதாரணமாக ஒரு புதிய நிறுவனம் உங்களை வேலைக்கு அமர்த்தினால், உங்களுக்கான புதிய அமீரக ரெசிடென்ஸ் விசாவிற்கு உங்கள் புதிய முதலாளி அல்லது நிறுவனம் விண்ணப்பிக்கலாம். அதே போல், நீங்கள் குடும்ப விசாவிற்கும் விண்ணப்பிக்கலாம்.
இருப்பினும், உங்களால் மேற்கூறிய படி செய்ய முடியாவிட்டால், சலுகை காலம் முடிவதற்குள் நீங்கள் அமீரகத்தில் இருந்து வெளியேற வேண்டும். ஏனெனில் உங்கள் விசா காலாவதியான பிறகும் அமீரகத்தில் தொடர்ந்து தங்கியிருந்தால் நீங்கள் கடுமையான அபராதங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.