Ads Area

கருப்பு என்பதால் பலமுறை நிராகரிக்கப்பட்டேன்..!

 சினிமாவில் நுழைந்தபோது பலமுறை நிராகரிக்கப்பட்டதாகவும், தான் சற்று கருப்பாக, வித்தியாசமாக இருப்பதாக பலர் கூறியதாகவும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பரேலியில் வளர்ந்து இன்று உலகில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. 18 வயதில் உலக அழகி பட்டத்தை வென்றபோது தனது தேடலைத் தொடங்கியதாகக் கூறுகிறார் நடிகரும், தயாரிப்பாளரும், தொழிலதிபருமான பிரியங்கா சோப்ரா ஜோன்ஸ்.

கடந்த 2000-வது ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் கால் பதித்த அவர் ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தார். 2018-இல் தன்னைவிட 10 வயது இளையவரான அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வரும் அவர், இந்தியா வந்துள்ள நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

முதல் படத்தில் நடிக்கும்போது எனக்கு 17 அல்லது 18 வயது. நான் செட்டில் சன்னி தியோலுடன் நடந்தபோது எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. ஏனென்றால் நான் அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தவள்.

நான் பரேலியில் உள்ள ஒரு சிறிய நகரத்தைச் சேர்ந்தவள். என் பெற்றோர் மருத்துவர்கள். நாங்கள் திரைப்படங்கள் பார்ப்போம். ஆனால் நானே சினிமாவில் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. அழகிப் போட்டியில் வென்றபிறகு என் வாழ்க்கை அந்த திசையில் சென்றுவிட்டது. அந்த வயதில் என் மேல் என்ன திணிக்கப்பட்டது என்று தெரியவில்லை. நான் செய்ததெல்லாம் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்க முயற்சித்ததுதான். நான் கற்றுக்கொண்டேன். என் சக நடிகர்களைப் பார்த்து தெரிந்துகொண்டேன். உலக புகழ்பெற்ற நடிகையாவது என்னுடைய கனவு அல்ல. அது நடந்து விட்டது.

நான் சிறிய வேடங்களில்தான் நடிக்கத் தொடங்கினேன். ஆனால் பெரிய கதாபாத்திரங்களை அடைய அது தேவை. இது மிகவும் எளிதானது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நான் செய்தேன், என்னால் முடிந்தது. இதற்காக நான் மிகவும் பணிவாக இருக்க வேண்டியிருந்தது.


பாலிவுட்டில் நான் செய்த வேலையை ஒவ்வொரு இடத்திலும் காட்ட வேண்டும். நடிப்புப் பயிற்சியாளர்களுடன் பணிபுரிந்தேன், பல ஆடிஷன்களில் கலந்துகொண்டேன், உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் பலமுறை நிராகரிக்கப்பட்டேன். ஆனாலும் முயற்சியை விடவில்லை. அதற்கு நான் வருத்தப்படவில்லை. உண்மையில் பெருமைப்படுகிறேன்.


ஒவ்வொரு நாளும் பெரிய கனவாக இருக்க வேண்டும். கீழிருந்து ஒவ்வொரு படியாக ஏற வேண்டும், ஒரே நேரத்தில் கீழிருந்து மேலே செல்ல முடியாது. நான் சினிமாவில் நுழைந்தபோது நான் அழகாக இல்லை. கருப்பாக, வித்தியாசமாக இருப்பதாக பலர் கூறினார்கள். நான் இயல்பிலிருந்து விலகியிருந்தேன். அவ்வளவு தான்.


நாம் அனைவரும் இங்கு முரண்பாடுகள்தான். நம் அனைவருக்கும் சொந்தத் தேவைகள், கனவுகள், ஆசைகள் உள்ளன. ஒரு நடிகரின் வேலை உண்மையில் நடிப்பதுதான். ஆனால் நான் பலதரப்பட்ட விஷயங்களைச் செய்ய விரும்புகிறேன். நடிப்புப் பள்ளிதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. அதைத்தான் இப்போது செய்து வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe