Ads Area

சவுதி அரேபியாவின் எரிசக்தி உற்பத்தி மையங்களில் ஈரான் தாக்குதல்...! சவுதியை 'அலர்ட்' செய்த அமெரிக்கா!

 சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும், இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தின. இதனால், ஈரான் - சவுதி இடையே பதற்றம் நீடித்தது. இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்து பேச்சுவார்த்தையை தொடர்ந்தன. ஆனால், ஒரு வருடத்துக்கு மேலாகியும் முடிவு எட்டப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், மீண்டும் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:

சவுதி அரேபியாவில் உள்ள எரிசக்தி உற்பத்தி மையங்களில் ஈரான் தாக்குதல் நடந்த வாய்ப்பிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

எங்கள் நலன்களையும் பிராந்தியத்தில் உள்ள எங்கள் நட்பு நாடுகளையும் பாதுகாக்க நாங்கள் தயங்க மாட்டோம். தற்போது பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ பாதுகாப்பு நிலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை இல்லை. எனினும், பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து கவலை கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சவுதி அரேபியா, அமெரிக்க அதிகாரிகளுடன் உளவுத் துறை தகவல்களை பகிர்ந்து கொண்டது. ஈரான் மீதான உடனடி தாக்குதலுக்கு தயாராகி வருவதாகக் சவுதி அரேபியா தெரிவித்து உள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe