Ads Area

தமிழகத்தில் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட அனுமதிக்கமாட்டோம் - சீமான்

 தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவை தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்பப்பெறாவிட்டால் தமிழகத்தில் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட அனுமதிக்கப்போவதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.


அந்த அறிக்கையில் பண்டிகைக்காலங்களில் நேரடித் தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது என சீமான் குறிப்பிட்டுள்ளார்.


எண்ணற்ற தெலுங்குத்திரைப்படங்கள் தமிழகத்தில் எவ்விதத் தடையுமின்றி வெளியாகிக் கொண்டிருக்கிற நிலையில் தமிழ் திரைப்படங்கள் வெளியாவதற்கு தடை விதித்திருக்கும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு மிகத்தவறான முன்னுதாரணமாகும்.தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கான திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 


நேரடித்தெலுங்கு திரைப்படங்களோ மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குத் திரைப்படங்களோ எதுவாயினும் தமிழகத்தில் எவ்வித பாரபட்சப்போக்குக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாது. தமிழ் திரைப்படங்களுக்கு இணையாகத் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.இந்தநிலையில் ஆந்திர மாநிலத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும் எனவும் சீமானின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன் 'கலைக்கு மொழி இல்லை' என்றுகூறி தமிழ் திரையுலகிலும் திரையரங்க ஒதுக்கீட்டிலும் மற்ற மொழியினருக்கும் அவர்களது திரைப்படங்களுக்கும் பெருவாய்ப்பு வழங்கிய தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு இது ஒரு பாடமாகும் என்றும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.தென்னிந்திய நடிகர்களுள் முதன்மையானவராகத் திகழும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கே இந்த நிலையென்றால் மற்ற படங்களின் நிலை என்னவாகும்?


 எனும் கேள்விதான் எழுகிறது. இந்த சிக்கல் விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடியாகும்.இதனை ஒருபோதும் ஏற்கவோ அனுமதிக்கவோ முடியாது. 


ஆகவே தமிழ் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனை செய்யத் தவறும் பட்சத்தில் தெலுங்கு திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோமென எச்சரிப்பதாக சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

thanks-hirunews



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe