சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோகி படுகொலை விவகாரத்தில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
நாட்டின் உயரிய பொறுப்பான பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு அமெரிக்காவில் சட்டபூர்வமான நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றங்களில் இருந்து சவுதி இளவரசருக்கு பாதுகாப்பு அளிப்பது முழுக்க முழுக்க சட்ட ரீதியிலான முடிவே எனவும் கூறப்படுகின்றது. அத்துடன் இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.
இதில் யாருக்கும் சலுகை காட்டப்படவில்லை என்று அமைச்சகம்; மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இந்த முடிவு இறுதியானது இல்லை எனவும், இளவரசர் சல்மானுக்கு சட்ட விலக்கு அளிப்பது குறித்து நீதிமன்றம்தான் இறுதி முடிவு எடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஜமால் கஷோகி, துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.
அரசாங்கம் மற்றும் பட்டத்து இளவரசர் சல்மானுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வந்த ஜமால் கஷோகி, இளவரசர் சல்மானின் உத்தரவின் பேரிலேலே கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தச் சூழலில், கஷோகி படுகொலை விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்த அமெரிக்கா, தற்போது இளவரசர் சல்மானுக்கு விலக்கு அளித்துள்ளது