Ads Area

எல்லை நிர்ணய ஆணை குழுவின் காலம் நீடிக்கப்பட்டு வடகிழக்குக்கு கண்காணிப்பு விஜயம் செய்ய வேண்டும்.

 நூருள் ஹுதா உமர்


வடகிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனம் அதன் சேவைகளை பரந்த அளவில் விஸ்தரிக்க தீர்மானித்து உள்ளது என்று தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.

இவர் நேற்று வியாழக்கிழமை கல்முனையில் ஊடகவியலாளர் மாநாடு வைத்து தெரிவித்தவை வருமாறு

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் இணை நிறுவனமான வடகிழக்கு மாகாண ஜிவொதய நலன்புரி நிறுவனம் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு மகத்தான சேவைகளை ஆற்றி வருகின்றது.

எமது அங்கத்தவர்களுக்கு மாத்திரம் அன்றி சாதாரண பொதுமக்களுக்கும் யுத்த காலம், ஆழி பேரலை அனர்த்தம், கொரோனா தொற்று நோய் பரம்பல் ஆகியவற்றின்போது ஆற்றிய சேவைகள் மிக பெறுமதியானவை.

எமது மக்களின் உரிமை குரலாகவும் ஜீவோதயம் விளங்குகின்றது. காலத்தின் தேவை கருதி ஜீவோதயத்தின் சேவைகளை பரந்த அளவில் விஸ்தரிக்க தீர்மானித்து உள்ளோம். இதன் மூலம் எமது மக்களுக்கு இன்னமும் கூடுதலான நன்மைகளை பெற்று கொடுக்க முடியும். புலம்பெயர் நாடுகளை சேர்ந்த தமிழ் உறவுகளும் இதை வரவேற்று உள்ளனர்.

மல்வத்தை பிரதேச மக்களுக்கு கட்டாயமாக பிரதேச சபை ஒன்று தேவை. இது இம்மக்களின் அடிப்படை தேவையாக உள்ள போதிலும் கடந்த மூன்று தசாப்தங்களாக நிறைவேற்றி தரப்படாமல் தட்டி கழிக்கப்படுகின்றது.

எனவே இக்கோரிக்கையை மீண்டும் வலியுறுத்து ஜீவோதயம் வரும் நாட்களில் அரசாங்க அதிபருக்கு மகஜர் சமர்ப்பிக்க உள்ளது. அதே நேரம் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை நிர்ணய ஆணை குழுவின் காலம் முடியும் தறுவாயில் உள்ளது.

இந்நிலையில் அதன் காலத்தை நீடித்து தர வேண்டும் என்று ஜனாதிபதியை ஜீவோதயம் கோருகின்றது.அத்துடன் இவ்வாணை குழு வடகிழக்கு மாகாணத்துக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு அவதானங்களை செய்ய வேண்டும்,
குறிப்பாக அமர்வுகளை நடத்தி பொதுநல செயற்பாட்டாளர்கள், பொதுமக்களின் கருத்துகளை செவிமடுக்க வேண்டும். பொதுமக்களின் சம்மதம் பெறப்படாமல் வலு கட்டாயமாக எல்லை மாற்றங்கள் செய்யப்படலாகாது.

அதே நேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுனர்கள் உடனடியாக மாற்றப்பபட வேண்டும் என்றும் வலியுறுத்தி நிற்கின்றோம்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe