Ads Area

கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக மனோரஞ்சினி பதவியேற்பு.

 (முதல்வர் ஊடகப் பிரிவு)


கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பேரின்பராஜா மனோரஞ்சினி, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் முன்னிலையில் தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினராக பதவி வகித்து வந்த புவனேஸ்வரியின் விநாயகமூர்த்தி அவர்கள் காலமானதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இவர் அக்கட்சியினால் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவரது நியமனம் தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 02.12.2022 ஆம் திகதியன்று தெரிவத்தாட்சி அதிகாரி கசன் சிறிநாத் அத்தநாயக்க அவர்களினால் வெளியிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மாநகர முதல்வர் முன்னிலையில் உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட பேரின்பராஜா மனோரஞ்சினி அவர்களுக்கு, நாளை இடம்பெறுவுள்ள கல்முனை மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை சமர்ப்பிப்பதற்கான விஷேட அமர்விலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள 57ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்விலும் பங்குபற்றுவதற்கு மாநகர முதல்வரினால் அனுமதி  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி பதவியேற்பு நிகழ்வில் மாநகர சபையின் மற்றொரு ஐ.தே.க உறுப்பினரான நடராஜா நந்தினி மற்றும் புதிய உறுப்பினரின் குடும்ப உறவினர்களும் பங்கேற்றிருந்தனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe