Ads Area

17 மேலதிக வாக்குகளினால் கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் வெற்றி.

(எம்.எம்.அஸ்லம்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு வியாழக்கிழமை (15) பிற்பகல் 03.00 மணியளவில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஆரம்பமானது.

இந்த அமர்வுக்கு மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் 41 பேரில் 35 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.

பட்ஜெட்டை சமர்ப்பித்து மாநகர முதல்வர் உரையாற்றியதைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்துகளையடுத்து பட்ஜெட் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 26 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 09 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 06 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 12 உறுப்பினர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 05 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர், தேசிய காங்கிரஸின் ஒரு உறுப்பினர், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒரு உறுப்பினர், சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 04 உறுப்பினர்கள், , ஹெலிகொப்டர் சுயேட்சைக் குழுவின் ஒரு உறுப்பினர் மற்றும் மான் சுயேட்சைக்குழுவின் ஒரு உறுப்பினருமாக 26 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 03 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 03 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.

அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 04 உறுப்பினர்களும் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 02 உறுப்பினர்களும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பலரும் மாநகர முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அத்துடன் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு முதல்வர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.




 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe