Ads Area

இனப்பிரச்சனைக்கான தீர்வு பேச்சுவார்த்தையில் முஸ்லிங்கள் தனித்தரப்பாக கலந்துகொள்ள வேண்டும் : அம்பாரை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம் கோரிக்கை

 நூருல் ஹுதா உமர்


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பின் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அனுசரணையுடன் எதிர்வரும்  சுதந்திர தினத்திற்கு முன்னர் நாட்டில் நிலவிவரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர  தீர்வினைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார் . இதனைத்தொடர்ந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இணைந்த வடகிழக்கிற்குள் சமஸ்டி தீர்வினைபற்றி பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஜனாதிபதியினால் தமிழ் தரப்பினை சந்தித்து பேசுவதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருகின்றது . ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கான தீர்வு தொடர்பில் பேசுவதற்கு  முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை  எங்கள் மத்தியில் பலதரப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என அம்பாரை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.
 
மேலும்  கடந்தகாலங்களில்  நடைபெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தம் முதல் ஒஸ்லோ மாநாடு வரையிலான இனத்தீர்வுக்கான  பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பு புறக்கனிக்கப்பட்டிருந்தமையே இன்று வரையில் இனப்பிரச்சினை புரையோடிப்போவதற்கு காராணம் என்பதனையும் உரிய தரப்புக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
இதனைக்  கருத்தில் கொண்டு அம்பாரை மாவட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனம், சம்மேளன தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அசீஸ் அவர்களின் தலைமையில் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில் கூடி கலந்துரையாடியதோடு தீர்மானங்களையும் மேற்கொண்டது.

அதில் எல்லோருக்கும் பொதுவான ஜனாதிபதி அவர்கள் நாட்டிலே நிலவுகின்ற இனப்பிரச்சினைக்கு  தீர்வு வழங்க முயற்சிக்கும் இவ்வேளையில் தொடர்ச்சியாக இனரீதியிலான நெருக்குதலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளையும் பேச்சுவார்த்தையின்போது தனித்தரப்பாக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவேண்டும் என்பதோடு எல்லா  சமூகங்களும்  நிம்மதியாக வாழுகின்ற  சூழலை உருவாக்கும் தீர்வு திட்டத்தினை முன்மொழிய வேண்டும்  என்றும் முஸ்லிம் சமூகத்துக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை மேலும் ஆய்வு செய்திட  நிபுணத்துவ ஆலோசனைக்குழு ஒன்றினை அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் ஏனைய மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காணப்படும் பள்ளிவாசகளின் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமா சபையோடும் இணைந்து அங்கு காணப்படும் பிரச்சினைகளை அடையாளம்கண்டு அவற்றுக்கான தீர்வினையும் பெற்றிட அனைத்து மாவட்டங்களையும் அடங்கிய ஓர்  அமைப்பாக இணைந்து செயற்படல் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு சம்மேளன செயலாளர் ஏ.எல். அன்வர்டீன் பொருளாளர் எஸ்.எம்.சபீஸ், உறுப்பினர்கள், உலமாக்கள்  மற்றும் புத்திஜீவிகள்  கலந்துகொண்டிருந்தனர்


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe