றியாஸ் ஆதம்
கூட்டுறவுச் சங்கங்கள் குறிப்பிட்ட பணிகளுடன் அதன் செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொள்ளாது, சமூகநல வேலைத்திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரும், மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளருமான என்.சிவலிங்கம் தெரிவித்தார்.
சம்மாந்துறை ஸபூர் சணச கூட்டுறவுச் சங்கத்தினால் அதன் அங்கத்தவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (3) சங்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் காணப்படுகிறது. மக்கள் மத்தியில் இருக்கும் பிழையான எண்ணங்களையும் சந்தேகங்களையும் களைந்து தூய கூட்டுறவை ஏற்படுத்துவதற்கு சகலரும் உழைக்க வேண்டும்.
அதிகமான சொத்துக்களுடன் மிகவும் பலமாக இருந்த எத்தனையோ சங்கங்கள் இன்று மிகக் குறைந்தளவிலான சொத்துக்களுடன் நலிவடைந்து காணப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் அங்கத்தவர்களுடைய சொத்தாகும் அதனைப் பேணிப்பாதுகாப்பது அவர்களுடைய கடமையாகும். சேற்றில் முளைத்த செந்தாமரை போல் ஒருசிலர் மாத்திரமே இதனைப் பொறுப்பேற்று சரியான முறையில் வழிநடத்துகின்றனர் என்றார்.
ஸபூர் சணச கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கணக்காளர் ஏ.எம்.றஷீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல் சிறப்பு அதிதியாகவும், தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஜாபீர் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது சங்கத்தின் அங்கத்தவர்கள் 100 பேருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.