Ads Area

கிட்டங்கி ஆற்றில் முதலை இழுத்துச்சென்ற இளைஞன் சடலமாக மீட்பு.

பாறுக் ஷிஹான்.


மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்துச்சென்ற நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காணாமற்போன இளைஞனை மீட்பதற்கு இன்று (24)  பொதுமக்களுடன் கடற்படையினர், பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்துச்சென்ற  நிலையில் காணாமற் போயிருந்தார்.

இச்சம்பவமானது அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி கல்முனைப் பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் இடம்பெற்றிருந்தது.

இதன் போது, மாடுகள் கிட்டங்கி வாவியில் இறங்கி நிற்பதாக நண்பன் தெரிவித்ததற்கமைய குறித்த இளைஞன் மாடுகளை கரையேற்றுவதற்காக வாவியினுள் இறங்கிய நிலையில் முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளது.

இவ்வாறு முதலை பிடியினால் காணாமற்போனவர் சேனைக்குடியிருப்பு 1 பிரிவு 157 விக்னேஸ்வரன் வீதியைச்சேர்ந்த சுகிர் பிரதாஸ் (வயது-30) என்பவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன், பொதுமக்களுடன் கடற்படையினர், பொலிஸார் இணைந்து தேடுதலை  மேற்கொண்டிருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி பகுதியில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதுடன், முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கை பலகைகள் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. 

முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில்  பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியமுள்ளது. 

இதை உரிய அதிகாரிகள் கவனத்திலெடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe