இந்தோனேஷியாவில் இருமல் மருந்து குடித்த 200 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் மீது பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்துள்ளதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் ஆய்வு செய்வதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தோனேஷியாவில் இந்த ஆண்டு இருமல் மருந்து குடித்த கிட்டத்தட்ட 200 குழந்தைகள் கடுமையான சிறுநீரகக் பாதிப்புகளால் இறந்துள்ளனர். அதையடுத்து இந்தோனேஷியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மீது பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கொன்ற அல்லது குழந்தைகளின் உறுப்புகளை சேதப்படுத்திய, கடுமையான சிறுநீரக பாதிப்புகளுடன் தொடர்புடைய மருந்துகளை நாட்டுக்குள் அனுமதித்ததற்காக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும் சில சிரப் அடிப்படையிலான பாராசிட்டமால் மருந்துகளில் காணப்படும் எத்திலீன் கிளைகோல் மற்றும் டைதிலீன் கிளைகோல் ஆகிய இரண்டு பொருட்கள் தான் குழந்தைகள் உயிரிழப்பிற்கு காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இரண்டு கெமிக்கல் பொருட்களும் உறைதல் தடுப்பு, பிரேக் திரவங்கள் மற்றும் பிற தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
அதேபோல் சில இருமல் மருந்துகளின் தயாரிப்புகளில் கிளிசரினுக்கு மாற்றாக இத்தகைய மலிவான கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கிளிசரினுக்கு மாற்றாக இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுவதால், அதை உட்கொள்பவர்களுக்கு கடுமையான சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு குடும்பமும் தங்களின் குழந்தைகளின் இறப்பு அல்லது உறுப்பு பாதிப்புக்கு இழப்பீடாக 2 பில்லியன் ரூபா வரை கோரியுள்ளதாகவும், அந்த பணத்தைக் கொண்டு நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை சிகிச்சை அளிக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாகவும், மேலும் குழந்தைகளின் இறப்புகளுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என பெற்றோர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவான் புர்யாடி கூறியுள்ளார்.
இந்தோனேஷியாவின் உணவு மற்றும் மருந்து நிறுவனம் (பிபிஓஎம்), சுகாதார அமைச்சகம் மற்றும் பல மருந்து நிறுவனங்களுக்கு எதிராக கடந்த மாதம் நடவடிக்கை எடுக்க வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தோனேஷிய நுகர்வோர் சமூகத்தின் டேவிட் டோபிங், சிரப்களை சோதிக்காததற்காக பிபிஓஎம் மீது கடந்த மாதம் தனி வழக்கு தாக்கல் செய்ததாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து ஆய்வு செய்வதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தோனேஷிய அதிகாரிகள் சில மருந்து நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்தியுள்ளனர்.
அவற்றின் தயாரிப்புகளில் அதிகப்படியான நச்சுப் பொருட்கள் எவ்வாறு வந்தன என்பதைப் புரிந்துகொள்ள மூலப்பொருள் விநியோகச் சங்கிலிகள் மற்றும் ஸ்கிரீனிங் செயல்முறைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
அதேபோல் காம்பியா நாட்டில் இந்தியாவின் மெய்டன் மருந்து நிறுவனம் தயாரித்த சிரப் மருந்துகளை உட்கொண்ட 70 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரித்து வரும் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இந்தோனேசிய அரசு தற்போது விசாரணையை ஆரம்பித்துள்ளது.
thanks-virakesari