அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனைத்து பகுதிகளும் தற்போது தடை செய்யப்பட்ட பூமியாக மாறி உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டத்தில பங்கேற்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
மேலும் உரையாற்றிய அவர், நாட்டில் வாழும் அனைத்து மக்கள் மத்தியிலும் ரணில் விக்ரமசிங்கவினால் செல்ல முடியாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
எமக்கு வடக்கா? கிழக்கா? தெற்கா? மேற்கா என்ற பிரச்சினை இல்லை. எவ்வித பேதமுமு் இன்றி எம்மால் மக்கள் மத்தியில் செல்ல முடியும்.
விவசாயா? தொழிலாளியா? சமய தலைவர்களா? காவல்துறையினரா? என்ற வேறுபாடு இல்லை. அவர்கள் அனைவரோடும் எம்மால் கலந்துரையாட முடியும். அவர்களை ஒன்று திரட்டவும் முடியும்.
எனினும் உங்களால் அதனைச் செய்ய முடியுமா? நீங்கள் அதிபராகி 8 மாதங்கள் ஆகிவிட்டன. நீங்கள் 100 பேரை சேர்த்து ஒரு கூட்டத்தை நடத்திக் காட்டுங்கள் பார்க்கலாம்.
மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவால் முடியாது. எனவே ரணில் விக்ரமசிங்க அதிபர் அல்ல. கப்பம் பெற்றோர், ஊழல் மோசடிக்காரர்கள் 113 பேரின் வாக்குகளினால் அவர் அதிபர் ஆனார்.
இந்த நாட்டு மக்கள் சில குடும்பங்களுக்கு ஆட்சிகளை வழங்கினார்கள். அது சரியானது. ஆனால் தற்போது என்ன நடந்துள்ளது. அந்த யுகம் தற்போது நிறைவடைந்துள்ளது.
மக்கள் தற்போது மக்கள் சார்ந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முதல் தடவையாக ஒன்றிணைந்துள்ளார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இன்று பெப்ரவரி 26 ஆம் திகதி ஆகின்றது. தேர்தல் அறிவித்து 36 நாட்கள் கடந்து விட்டன. தேர்தல் நடக்க எட்டு நாட்கள் இருக்கும் பொழுது தேர்தலை ரத்துச் செய்துள்ளார். ஏன் அவ்வாறு செய்தார்.
அதிகாரம் மாறுவதில்லை என்றே அதிபர் ரணில் விக்ரமசிங்க சிந்தித்தார். ரணில் விக்ரமசிங்க தரப்பிலிருந்து ராஜபக்ச தரப்பினருக்கு அதிகாரம் மாற்றப்படும் ஆக இருந்தால் தேர்தலை நடத்துவதற்கு பின்வாங்கி இருக்க மாட்டார்கள்.
ராஜபக்ச தரப்பில் இருந்து விக்ரமசிங்க தரப்பிற்கு அதிகாரம் மாறுவதாக இருந்தாலும் தேர்தலை நடத்தி இருப்பார்கள். ஏன் தேர்தலை நடத்துவதற்கு இவர்கள் அஞ்சுகின்றார்கள்.
இலங்கை வரலாற்றில், அரசியல் நிலைமை இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலம் மாற்றமடைய உள்ளமையினாலே அவர்கள் இந்த தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள்.
எனினும் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாம் ஒரு விடயத்தைக் கூறுகின்றோம். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த மக்களின் எழுச்சியை தேர்தலை நிறுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று நினைக்க வேண்டாம். அதிபர் நாடாளுமன்றத்திற்கு வந்து உரையாற்றினார். அவர் எதிர்க்கட்சியில் இருந்து கதைக்காக கூறுகின்றார். மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சியை தடுக்க வேண்டுமாக இருந்தால், தேர்தலை பிற்போடுமாறு கூறியதாக அவர் கூறினார்.
மக்கள் இன்று தேர்தலுக்காக எழுச்சி அடையவில்லை. மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாகவே இப்போது மக்கள் முன் வந்திருக்கிறார்கள்.
தேர்தல் தாமதமாகவும் ஒவ்வொரு நாளும் என்ன இடம்பெறும் என்பதை சற்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மக்களுடைய போராட்டம் அதிகரிக்கும் அதனை புரிந்து கொள்ளுங்கள்.
முதல் நாளே நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகங்களை மேற்கொண்டனர். தொடர்ந்தும் இவை இடம்பெறுமாக இருந்தால் காவல்துறையினரும் இராணுவத்தினரும் மறுபக்கம் திரும்புவார்கள் என்பது எமக்கு தெரியும்” - என்றார்.
ThanksIBC