Ads Area

தலைமறைவான ஹெரோயின் வலைப்பின்னல் முகவர் 57 நாட்களின் பின்னர் கைது.

 பாறுக் ஷிஹான்


ஆடம்பர வாகனங்களூடாக ஹெரோயின் போதைப்பொருளைக்கடத்தி வந்த குழுவினர் எனச்சந்தேகிக்கப்பட்ட நபர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியிருந்த நிலையில் தலைமறைவாகி தப்பிச்சென்ற ஏனைய முக்கிய சந்தேக நபர்களைத்தேடிக் கண்டுபிடிப்பதில் கல்முனை தலைமையக பொலிஸார் தொடர்ச்சியாக உரிய  நீதிமன்ற அனுமதியுடன்  ஈடுபட்டு வந்திருந்திருந்தனர்.


இதற்கமைய கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தினூடாக ஏற்கனவே சென்று வந்தது போன்று இந்தியாவிற்கு தப்பிச்செல்லக் காத்திருந்த இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஹெரோயின் வலைப்பின்னலின் மூளையாகச்செயற்பட்ட சந்தேக நபர் நடமாடுவதாக விசேட பிரிவுப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.


இதன் போது, கல்முனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச்.டி.எம்.எல்.புத்திக வழிநடத்தலில்    கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியுடன் கல்முனை குற்றப்புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் சென்ற கல்முனை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ரவூப் உள்ளிட்ட குழுவினர் சந்தேக நபரை விமான நிலைய பொலிஸாரின் பொறுப்பில் இருந்து மீட்டு கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு திங்கட்கிழமை (20) அழைத்து வந்தனர்.


இவ்வாறு அழைத்து வரப்பட்ட 31 வயதுடைய சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து  நிந்தவூர்ப் பகுதியில் அமைந்துள்ள வீடு உள்ளிட்ட பகுதிகள் பொலிஸாரினால் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.


மேலும் 5 திருமண உறவுகளை சந்தேக நபர் கொண்டுள்ளார்.


பின்னர் சந்தேக நபர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (20) மாலை பொலிஸார் முன்னிலைப்படுத்திய போது, 5 நாட்கள் ( 120 மணித்தியாலங்கள்) தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புபட்டு தலைமறைவாகியுள்ள ஏனைய சந்தேக நபர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளையும் கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


சம்பவத்தின் பின்னணி 


அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கைய திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் இந்நடவடிக்கையினை மேற்கொண்டு இரு வாகனங்கள், 50 கிராம் 139 மில்லி கிராம் ஹெரோயினுடன் 36 வயது சந்தேக நபரையும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வியாழக்கிழமை (22) நள்ளிரவு கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.


இவ்வாறு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்களில் ஒரு வேன் மற்றும் கார் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


இதே வேளை,இந்த நடவடிக்கையின் போது தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் என இனங்காணப்பட்டவர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரினால் பகுதியில் சோதனை இடப்பட்டுள்ளன.


இதன் போது, தப்பிச்சென்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என கல்முனை தலைமையக  பொலிஸார் குறிப்பிட்டனர்.


மேலும், கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் வீதியில் கடந்த டிசம்பர் மாதம் (23) காலை காரொன்றிலிருந்து  'ஐஸ்' போதைப்பொருள் விசேட அதிரடிப்படையினரால்  மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe