பாறுக் ஷிஹான்
பாதணி விற்பனை நிலையமொன்றில் பணியாற்றி தொலைபேசியூடாக சூட்சுமமாக போதையூட்டும் குளிசைகளை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், கல்முனை நகரப்பகுதியில் பிரபல பாதணிகள் விற்பனை செய்கின்ற கடையில் பணியாற்றும் நபர் போதை மாத்திரைகளை விநியோகிப்பதாக கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.
இதற்கமைய நேற்று மாலை தேடுதல் மேற்கொண்டு குறித்த கடையில் பணியாற்றிய மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 28 வயதான சந்தேக நபரைக் கைது செய்ததுடன், சந்தேக நபரது உடமையிலிருந்து 100 போதை மாத்திரைகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைதான சந்தேக நபர் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீண்ட காலமாக போதை மாத்திரைகளை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு விநியோகித்து வந்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தவிர, கைதான பின்னர் சந்தேக நபருக்கு போதை மாத்திரை விற்பனை தொடர்பாக பல தொலைபேசி தொடர்புகள் வந்த வண்ணமுருந்தன.
இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்ட பதில் கட்டளை அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கட்டளையதிகாரி டி.சி வேவிடவிதான ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி. எம்.டயஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443), பொலிஸ் கன்ஸ்டபிள்களான அபேரட்ண (75812), நிமேஸ் (90699), ஜயவர்த்தன (94155), சாரதி குணபால (19401) ஆகியோர் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரைக்கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை சான்றுப்பொருட்களுடன் நீதிமன்ற நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸாரிடம் பாரப்படுத்தியதுடன், விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.