வளர்ப்புத் தந்தையினால் தாக்கப்பட்ட சிறுவன் இன்று (09) வியாழக்கிழமை பரிதாபமாக மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
வளர்ப்புத்தந்தையினால் தாக்கப்பட்ட சிறுவன் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நாவற்குடா கிழக்கு பிர்தௌஸ் நகரைச்சேர்ந்த. முகம்மட் அரீப் எனும் சிறுவனை வளர்ப்புத்தந்தை கடுமையாகத் தாக்கியதில் சிறுவன் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
11 வயதுடைய குறித்த சிறுவனை தாக்கிய சிறுவனின் வளர்ப்புத்தந்தை காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, குறித்த சிறுவனின் தாய் தனது கணவரை விவாகரத்துச் செய்த பின்னர் மாத்தளையைச்சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்திருந்தார். இவர் திருமணம் செய்து ஒரு வருடமாகின்றது.
இர்தாய்க்கு முதல் திருமணத்தில் மூன்று பிள்ளைகள் உள்ளனர். தனது புதிய கணவரிடம் தனது மூன்று பிள்ளைகளில் 11 வயதுடைய ஒரு மகனைக் கொடுத்து விட்டு வெளிநாடு (குவைத்) சென்றுள்ளார்.
ஏனைய இரண்டு பிள்கைளில் ஒரு பெண் பிள்ளை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு மகன் முன்னாள் கணவரும் அவரது குடும்பமும் பொறுப்பேற்று வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதிய கணவர் வளர்ப்பு மகனை கர்பலாவிலுள்ள வாடகை வீடொன்றில் வாழ்ந்து வந்த நிலையில் மிகக்கடுமையாக சிறுவனைத் தாக்கியுள்ளார்.
படுகாயங்களுக்குள்ளான சிறுவன் மயக்க மடைந்திருந்த நிலையில் (6) திங்கட்கிழமை மாலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிறுவன் விபத்தில் விழுந்ததாகக்கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், போலியான முகவரியொன்றையும் கொடுத்துள்ளார்.
சிறுவனை மேலதிக சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிறுவனின் உடம்பில் தாக்கப்பட்ட பலத்த காயங்கள் காணப்பட்டதையடுத்து, சந்தேகமுற்ற வைத்தியசாலை வைத்தியர் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு அறிவித்ததையடுத்து, அங்கு விரைந்த சிறுவர் பிரிவு அதிகாரிகள் சிறுவனின் தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியதியதுடன், வைத்தியசாலை பொலிசாருக்கும் விடயம் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சிறுவனைத் தாக்கிய வளர்ப்புத் தந்தை செவ்வாய்க்கிழமை (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனைத்தாக்கியதாகக் கூறப்படும் கர்பலாவிலுள்ள உரிய இடத்துக்கு புதன்கிழமை சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்பிரிவுப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ரஹீம் விசாரணைகளை மேற்கொண்டார்.
சிறுவனைத் தாக்கியதாக வளர்ப்புத் தந்தையிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து சிறுவனைத் தாக்கியதை அவர் ஒப்புக்கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சந்தேக நபரான குறித்த வளர்ப்புத் தந்தையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
குறித்த சிறுவன் நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 126 புள்ளிகளைப் பெற்றிருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்
சிறுவனின் ஜனாஸா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
எம் எஸ் எம் நூர்தீன்
09.02.2023

